
ஐந்தாவது போர் மூளும் சூழல் நிலவுவதால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் உருவாகி இருக்கிறது. 54ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் போர் மூளுவதை தவிர்க்குமாறு ஐநா அறிவுறுத்திய நிலையிலும், நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடைபெறுகிறது.
இதுவரையிலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 முறை அறிவிக்கப்பட்ட போர்களும், சில எல்லைச் சண்டைகளும் நடந்துள்ளன. தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதால் இந்தியா பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஐந்தாவது போர் மூளும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பிரிவினைக்கும் பின்னர் 1947இல் தொடங்கி 1948 வரையிலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே முதல் போர் நடந்தது. 1965இல் 2ஆவது போர் நடந்தது. 1971இல் 3ஆவது போர் நடந்தது. முதல் மூன்று போர்களுக்கும் காஷ்மீர் பிரச்சனைதான் முக்கிய காரணமாக இருந்தது.

பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டித்தது இந்தியா.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதால் பாகிஸ்தானும் இதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. இதனால், ‘’போர் வேண்டாம். ராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது’’ என்று அறிவுறுத்தி இருக்கிறது ஐநா. ஆனாலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முன் தயாரிப்புகளை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது இந்தியா. எந்த நேரமும் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் அமைச்சரும் அந்நாட்டு இராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கப்போவது உறுதியாகி விட்டதால் தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 244 மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம், சென்னை விமான நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தலைமைச்செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

54 ஆண்டுகளுக்கு முன்பு 1971ஆம் ஆண்டிலும் இதே போன்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. வான் வழி தாக்குதல் நடந்தால் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம், இணையதளம் முடங்கினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடந்தால் மக்களை பாதுகாக்க பொது இடங்களில் சைரன்களை ஒலிக்கவிடுவது குறித்தும் ஒத்திகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையிலும், முக்கிய தொழிற்சாலைகளை எதிரிகள் கண்ணில் இருந்து மறைத்து பாதுகாக்கவும் இந்த ஒத்திகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த போர்க் கால பாதுகாப்பு ஒத்திகையினால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று நம்பிகையூட்டுகின்றனர் முன்னாள் இராணுவ அதிகாரிகள்.