இந்தியாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 145 கோடி பேர். அவர்களின் பிரதிநிதிகள்தான் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த எம்.பி.க்களின் குரல் எந்த அளவில் ஒலிக்கிறதோ அந்த அளவிற்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் அலசப்பட்டு, தீர்வு காண்பதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அதற்கான வாய்ப்பை வழங்குகிறதா?
வழக்கத்தைவிட குறைவான நாட்களே இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்று தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவரான திருச்சி சிவா எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குறைந்த நாட்களில், எதிர்க்கட்சியினருக்கு உரிய வாய்ப்புகளை மக்களவை-மாநிலங்களைவத் தலைவர்கள் வழங்குவார்களா? அதனை எதிர்க்கட்சியினர் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவார்களா? அந்தப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுக்குரிய நியாயமான பதில்களை ஆளுந்தரப்பு வழங்குமா என்பதுதான் இந்த எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய இந்திய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.
வாக்காளர்கள் மூலமாகவே எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அந்த வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலான, குறைந்த காலக்கெடுவுக்குள் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர் எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குறித்த எதிர்ப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்ய முயன்றபோது, அதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இத்தனைக்கும் மாநிலங்களவையை வழிநடத்துபவர் துணை ஜனாதிபதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்தான்.
அவருடைய பதவிக்காலத்தின் முதல் நாடாளுமன்ற நடவடிக்கை நாளான டிசம்பர் 1ந் தேதியன்று கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் அவரை வாழ்த்தினர். கூட்டாட்சி அமைப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மாநிலங்களவைத் தலைவரான துணை ஜனாதிபதியின் செயல்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்துப் பேசின. அவர்கள் பேசும்போதே பா.ஜ.க.வை சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.க்களும் தேவையின்றிக் குறுக்கீடு செய்தனர். இது குறித்து, துணை ஜனாதிபதியிடமே எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ஆனாலும், நாடாளுமன்ற மரபுகளை மதிப்பதில்லை என்பதை ஆளுந்தரப்பு ஒரு நடைமுறையாகவே வைத்திருக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அவர் இது போன்ற சிக்கலறற்ற தருணங்களில் மட்டுமே அவர் செய்தியாளர்களிடம் பேசுவார். நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுவதில்லை. தான் பேசவேண்டிய நாளில் மட்டும் அவைக்கு வந்து பேசுவதும், தீர்மானங்களை நிறைவேற்றுவதுமே அவரது நாடாளுமன்ற செயல்பாடாக உள்ளது.
கூட்டத் தொடருக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர், “நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்கான இடம். இங்கே நாடகங்களை அரங்கேற்றக் கூடாது. எந்த மாநிலத்திலாவது தேர்தல் நடக்கிறது என்றால் அதற்கான பிரச்சாரக் களமாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை மாற்றிவிடுகின்றன. தேர்தலில் தோல்வி அடைந்தபிறகு தங்கள் விரக்தியைக் கொட்டுவதற்கான இடமாக ஆக்கிவிடுகின்றன” என்ற விமர்சனத்தை வைத்தார்.
பிரதமரின் கருத்துக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, “நாடாளுமன்றம் என்பது எதற்காக? மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்பது நாடகமா? மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் அதை விவாதிப்பதற்கும் மறுப்பதற்குப் பெயர்தான் நாடகம்” என்று தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளால் பாக நிலை அலுவலர்கள் எனப்படும் பி.எல்.ஓ.க்கள் பலர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டியும், அவசரகதியிலான எஸ்.ஐ.ஆர். பணிகளால் வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோவதையும் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கங்களை எழுப்பின. அதே கருத்தை மாநிலங்களவையில் முன்வைக்க முயன்ற போதுதான், அனுமதி மறுக்கப்பட்டு, தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ய வேண்டியதாயிற்று.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா எம்.பி., “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதங்களை எழுப்பினால், அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதி கேட்டால் அமளி செய்வதாக குற்றம்சாட்டுகிறார்கள்” என்று ஆளுந்தரப்பின் செயல்பாடுகளை விமர்சித்தார். நாடாளுமன்றம் என்பது பலவித விவாதங்களுக்கு இடமளிக்க வேண்டிய இடமாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமானதை மட்டும் பேசுவதற்கு அது ஒன்றும் பிரதமரின் ‘மன்கி பாத்‘ உரை அல்ல.
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள தலைவர்கள் நாடாளுமன்ற விவாதங்களை ஆதரிப்பார்கள். ஆளுங்கட்சியினர் தங்கள் சாதனைகளையும், எதிர்க்கட்சியினர் அதன் மீது விமர்சனங்களையும் முன் வைப்பார்கள். அதற்கு இடமில்லாத நாடாளுமன்றம் என்பது இந்திய மக்களை அவமதிக்கும் இடமாக அமைந்துவிடும்.
