மலைகளுக்குச் சென்றாலும் சரி அல்லது நெடுஞ்சாலைகள் வழியாக சென்றாலும் சரி, இந்த குளிர்காலத்தில் மூடுபனியின் வழியாக எப்படி நீண்ட பயணம் மேற்கொள்வது என்பதை குறிப்பது அவசியம்.
காலநிலை மாற்றமும் அதிகரிக்கும் பனிப்பொழிவும் :
அதிகரிக்கும் பனிப்பொழிவுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் புவி வெப்பமடைவதால் (Global warming) வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த கூடுதல் ஈரப்பதம் குளிர்காலத்தில் வழக்கத்தை விட அதீத பனிப்பொழிவாக உருவெடுக்கிறது.
மேலும், ஆர்க்டிக் பகுதியில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் ‘துருவ சுழல்’ (Polar Vortex) எனப்படும் குளிர் காற்றை நிலநடுக்கோட்டுப் பகுதிகளை நோக்கித் தள்ளுவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சில நாடுகளில் கடும் பனிப்புயல்கள் ஏற்படுகின்றன. இதனால் குளிர்காலத்தின் கால அளவு சுருங்கியிருந்தாலும், பனி பெய்யும் போது அதன் தீவிரம் மற்றும் பாதிப்பு பலமடங்கு அதிகமாக உள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் பனிப்பொழிவு அதிகரிக்க காரணம் என்ன ?
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பனிப்பொழிவு (Snowfall) அதிகரிப்பதற்குப் பின்வரும் முக்கியக் காரணங்களை வானிலை ஆய்வு மையங்கள் (IMD) குறிப்பிடுகின்றன:
- லா நினா (La Nina) தாக்கம்: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘லா நினா’ நிகழ்வு இந்த ஆண்டு இந்தியாவில் கடுமையான குளிர் மற்றும் அதிக பனிப்பொழிவுக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. இது வளிமண்டல சுழற்சியை மாற்றி, இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவை தீவிரப்படுத்துகிறது.
- மேற்கத்திய இடையூறுகள் : மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று (Western Disturbances), வடமேற்கு இந்தியாவில் தொடர்ச்சியான மழையையும், மலைப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவையும் ஏற்படுத்துகிறது. டிசம்பர் மாத இறுதியில் இவை மிகவும் தீவிரமாக உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
- ஜெட்டும் காற்றோட்டங்கள் (Jet Stream): வளிமண்டலத்தின் மேல் பகுதியில் வீசும் அதிவேகக் காற்றோட்டங்கள் (Jet Streams) தெற்கு நோக்கி நகர்வதால், ஆர்க்டிக் மற்றும் சைபீரியா பகுதிகளிலிருந்து வரும் குளிர்ந்த காற்று இந்தியாவிற்குள் ஊடுருவுகிறது.
- சில்லாய் கலான் (Chillai Kalan): காஷ்மீரில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 வரை நிலவும் ‘சில்லாய் கலான்’ என்ற 40 நாட்கள் கொண்ட கடுமையான குளிர்காலக் கட்டம், இப்பகுதியில் பனிப்பொழிவு உச்சத்தை அடைய முக்கியக் காரணமாகும்.
- இந்த வானிலை மாற்றங்களால் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு பதிவாகி வருகிறது.
இந்தாண்டு பனிபொழிவால் நிகழந்த பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்
2025-ஆம் ஆண்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக உலகளவில் பெரும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் டிசம்பர் மாத மத்தியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், சர்வதேச அளவில், அமெரிக்காவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வீசிய தொடர் பனிப்புயல்களால் சுமார் 30 பேர் உயிரிழந்ததோடு, லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். மேலும், பனிப் படர்ந்த சாலைகளில் ஏற்படும் வழுக்கல் மற்றும் குறைவான பார்வைத்திறன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 2,000 பேர் விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
பனிமூட்டத்தில் பயணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய 6 முக்கிய குறிப்புகள்
1. வெள்ளைக் கோட்டைப் பின்பற்றுங்கள்
பனிமூட்டம் (Fog) அதிகமாக இருக்கும்பொழுது, சாலையின் நடுப்பகுதியை கவனிப்பதைவிட, இடது புற விளிம்பில் உள்ள வெள்ளைக் கோட்டை கவனிப்பது பாதுகாப்பானது. இது வாகனம் திசை தவறாமல் செல்ல உதவும். குறிப்பாக வளைந்த சாலைகளில் மெதுவான வேகத்துடன் இதைப் பின்பற்றுவது சறுக்கலைத் தவிர்க்கும்.
2. ஜன்னல்களை உள்ளேயும் வெளியேயும் தெளிவாக வைத்திருங்கள்
வெளிப்புற பனிமூட்டத்துடன் சேர்ந்து, வாகனத்தின் உள்ளே ஏற்படும் ஈரப்பதமும் பார்வையை பாதிக்கும். இதைத் தவிர்க்க டிஃபோகர் மற்றும் ஏர் கண்டிஷனிங் பயன்படுத்த வேண்டும்.மேலும், விண்ட்ஷீல்டும் பக்க கண்ணாடிகளும் சுத்தமாக இருந்தால் தெரிவுநிலை மேம்படும். தொடர்ந்து அவசர தேவைக்காக மென்மையான துணி ஒன்றை எடுத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
3. பார்ப்பதைவிட கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்
அடர்ந்த பனிமூட்டத்தில் பார்வை மட்டுமல்ல, செவியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இசை ஒலியை குறைத்து, அருகில் வரும் வாகனங்களின் சத்தம் அல்லது ஹாரன் ஒலிகளை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் வாகனம் கண்களில் படுவதற்கு முன்பே ஒலி மூலம் அபாயம் குறித்து எச்சரிக்கை கிடைக்கும்.
4. GPS-ஐ முழுமையாக நம்பாமல் சாலையைக் கவனியுங்கள்
GPS மற்றும் வழிசெலுத்தல் செயலிகள் திசை காட்ட உதவும். ஆனால் சாலையில் உள்ள திடீர் வளைவுகள், பள்ளங்கள் அல்லது முன்னால் நிற்கும் வாகனங்களை அவை எச்சரிக்காது. எனவே GPS-ஐ உதவிக் கருவியாக மட்டும் பயன்படுத்தி, முழுக் கவனத்தையும் சாலையில் வைத்திருப்பது அவசியம்.
5. பனி அதிகமாக இருந்தால் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்
பனிமூட்டம் மிக அடர்த்தியாக இருக்கும் போது பயணத்தைத் தொடர்வதைவிட, பெட்ரோல் பங்க் அல்லது ஓய்விடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் வாகனத்தை நிறுத்துவது சிறந்தது. சாலையின் ஓரத்தில் நிறுத்துவது ஆபத்தானது. அபாய விளக்குகளை (Hazard Lights) இயக்கி, நிலைமை சீராகும் வரை காத்திருங்கள்.
6. திடீர் பாதை மாற்றங்களைத் தவிர்க்கவும்
மூடுபனியில் திடீரென பாதைகளை மாற்றுவது மற்ற ஓட்டுநர்களை குழப்பி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே பாதை மாற்றம் அவசியமானால் மெதுவாகவும், தெளிவான குறிகாட்டிகளுடன் (Indicators) செய்ய வேண்டும்.
