புஷ்பா2 திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொண்டாடப்படும் நிலையில், அந்தப் படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதும், அவர் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் வைத்த கடுமையான விமர்சனங்களும், அதற்கு அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ள மறுப்பும் பரபரப்பான விவாதங்களாகியுள்ளன.
அல்லு அர்ஜூன் தெலுங்கு திரையுலகில் தற்போது கொடி கட்டிப் பறக்கும் கதநாயகனாக இருக்கிறார். ஒரு திரையரங்கில் புஷ்பா2 படம் திரையிடப்பட்ட நிலையில், அதனைப் பார்க்க நாயகனான அல்லு அர்ஜூன் சென்றபோது, அவரைப் பார்க்கும் ஆவலில் கூட்டம் முண்டியடிக்க, அதனால் ஏற்பட்ட நெரிசலில் ஒரு தாயும் மகனும் உயிரிழந்த வேதனையான நிகழ்வு நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் சார்பில் நிவாரணத் தொகையாக இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. எனினும், நடந்த சம்பவம் குறித்து தெலங்கானா போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர். காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார் அல்லு அர்ஜூன். விசாரிக்கப்பட்டபிறகு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமீனால் விடுவிக்கப்பட்டார்.
தெலங்கானா மாநிலத்தில் மட்டுமின்றி, பிற மாநில சினிமா ரசிகர்களிடமும் இந்த கைது-ஜாமீன் விவகாரம் பரபரப்பானது. தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களும், வேறு சில மாநிலங்களின் நடிகர்-நடிகையரும் அல்லுஅர்ஜூனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஆதரவு தெரிவித்தனர். பொதுவாகவே, சினிமா நடிகர்கள் சார்ந்த செய்திகள் அரசியல் செய்திகளைவிட அதிகளவில் கவனம் ஈர்க்கும் என்பதால் நடிகர்-நடிகையர் அல்லு அர்ஜூனை சந்தித்ததை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இதனால், அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா போலீஸ் எடுத்த நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளானது.
இதைத்தான் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் விமர்சித்து கருத்து தெரிவித்தார். அர்ஜூன் ரெட்டி கால்களை இழந்தாரா? கண்களை இழந்தாரா? அல்லது கிட்னியை இழந்தாரா? பிரபலங்கள் அவரை சந்திக்க வேண்டிய காரணம் என்ன? அல்லு அர்ஜூனை சந்தித்த சினிமா நட்சத்திரங்கள் யாரேனும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார்களா? என்று கேட்டதுடன், படம் திரையிடப்படும் அரங்கத்தின் கூட்டத்தை உணர்ந்து அல்லு அர்ஜூன் அங்கே செல்ல வேண்டாம் எனப் போலீஸ் அறிவுறுத்தியும், அதை மீறித்தான் அங்கே சென்றார். தியேட்டர் கூட்ட நெரிசலில் உயிர்ப்பலிகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இனிமேல் தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை எனவும், அதிக கட்டணத்திற்கு டிக்கெட் விற்கப்படுவதும் தடுக்கப்படும் எனவும் தெலங்கனா முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அல்லு அர்ஜூன் மறுத்துள்ள நிலையில், தெலங்கானாவில் அரசியலுக்கும் சினிமாவுக்குமான மோதலாக இந்த விவகாரம் மாறி வருகிறது. அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் எறிந்து தாக்கியும், பூந்தொட்டிகளை உடைத்தும் கலவரம் செய்ய முயன்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலவே ஆந்திராவிலும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானாவும் சினிமா ரசனையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மாநிலங்களாகும்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆனது போல, ஆந்திராவில் என்.டி.ஆர். புதுக்கட்சி தொடங்கி 9 மாதங்களில் முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றார். என்.டி.ஆருக்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய நட்சத்திரமாகி, இந்தித் திரையுலகிலும் முத்திரை பதித்த சிரஞ்சீவியும் புதிய கட்சி தொடங்கி தேர்தல் களம் கண்டார். முழுமையான வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவர் வழியில் அரசியலில் இறங்கிய பவன் கல்யாண் இப்போது ஆந்திராவின் துணை முதல்வராக இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் தலைநகரான ஹைதராபாத்தான் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமாகும். சினிமாவுக்கும் அரசியலுக்குமான உறவு, தற்போது தெலங்கானாவில் பகை உணர்வாக மாறியிருக்கிறது. தெலங்கானா முதலமைச்சர் கேட்ட கேள்விகளில் தவறில்லை. இரண்டு உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட பல மாநில முதல்வர்களும் சினிமாக்காரர்களுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து தருவது, ஏற்கனவே ரசிகர்களின் பக்திமயமான ரசனையில் திளைக்கும் அவர்களுக்கு கூடுதல் செல்வாக்கை உருவாக்கிவிடுகிறது. விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாத பிரதமரும் கூட நடிகர்-நடிகை என்றால் நேரம் ஒதுக்குகிற நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துகளும் அல்லு அர்ஜூனாவின் செயல்பாடுகளும் அதிக கவனம் பெற்றுள்ளன. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது இந்த விவகாரத்தில் நிரூபிக்கப்பட்டால் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும்.