மோடி3.0 என்று சொல்லப்படுகிற பா.ஜ.க.வின் இந்த ஆட்சியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஜனநாயகத்தின் மீதான ஏமாற்றமே தொடர்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 75வது ஆண்டில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில், அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள சோஷலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் படி உயர்ந்த பொறுப்பில் உள்ள குடியரசுத் தலைவரே இந்த சொற்களைத் தவிர்த்திருப்பது, மோடி 3.0 ஆட்சியின் தரம் என்ன என்பதைக் காட்டுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின முகப்புரையில் 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக் காலத்தில இந்த இரண்டு சொற்களையும் அன்றைய காங்கிரஸ் அரசு இணைத்தது. அதனால் மோடி அரசு தொடக்கத்திலிருந்தே அது தவிர்த்து வருகிறது. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்திற்கு மாற்றாக இந்த சொற்களை சேர்த்துவிட்டதாக, அம்பேத்கரை தனக்குத் துணையாக இழுக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசு. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்த இரண்டு சொற்களும் இல்லை என்றாலும், சோஷலிசம் எனும் பொருளாதார சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தி வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக உள்ள இந்த இரண்டையும்தான் முகப்புரையில் பின்னர் இணைத்தனர். இந்த சொற்களை சேர்த்தது தவறு என்றும் நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க தரப்பிலிருந்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஓரிரு நாட்களிலேயே அந்த சொல்லைத் தவிர்த்து குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார் என்றால் பா.ஜ.க ஆட்சி என்பது உச்சநீதிமன்றத்தையும் சட்டதிட்டங்களையும் மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது.
நாடாளுமன்றம் என்பது இந்திய மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய அரங்கம். பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியமான இந்திய அரசு மாநிலங்களின் நலன்களைக் காப்பதில் தாய்மைப் பண்புடன் திகழ வேண்டும். பா.ஜ.க அரசு அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதையே தனது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. பெட்டேராலியப் பொருட்களை மண்ணிலிருந்து எடுப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையில், புதிய திருத்தம் கொண்டு வருவதை தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டி ராஜ்யசபாவில் பேசியிருக்கிறார். பெட்ரோலிய அமைச்சகம் என்பது ஒன்றிய அரசின் கீழ் இருந்தாலும் பெட்ரோலியப் பொருட்கள் எடுக்கப்படும் மாநிலங்களுக்குரிய வரி வருவாயைப் பறிக்கின்ற வகையிலேயே இந்தத் திருத்தத்தை மோடியின் 3.0 அரசு கொண்டு வருகிறது என்பதை அவர் மாநிலங்களவையில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
வக்ஃபு வாரியத்தின் கீழ் வரும் சொத்துகள் தொடர்பாக மோடி அரசு கொண்டு வரும் புதிய நடைமுறைகளுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளன. இந்தக் குழுவின் ஆய்வுப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா-பாரபட்சமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி குழு உறுப்பினர்களாலேயே எழுப்பப்பட்டிருக்கிறது. குழுவுக்குத் தலைவரான பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகாபால் ஒரு சார்பு நிலைப்பாட்டுடனேயே கருத்துகளைத் தெரிவித்து வருவதை குழுவின் மற்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர்.
குறிப்பிட்ட மதத்தின் மீதான வன்மம், மாநிலங்களின் மீதான ஒடுக்குமுறை, எதிர்க்கட்சிகள் அரசுகள் மீதான சட்டரீதியான-சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் இவையே மோடி 3.0 ஆட்சியிலும் தொடர்கின்றன. அந்தந்த மாநிலத்து மக்களின் குரலாக அதன் மக்கள் பிரதிநிதிகள் பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் ஆதிக்க குரலே நீடிக்கும் என்று உணர்த்தும் வகையிலேயே மோடி, அமித்ஷா ஆகியோரின் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி அமைந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும், மாநிலங்களவையில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இடம்பெற்றுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், ப.சிதம்பரம், கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, மொய்வா மைத்ரா, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வாதங்களில் ஜனநாயகத்தின் குரலாகத் திகழ்வது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யாமல் காக்கிறது. வயநாடு தொகுதியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்காவும் இதில் இணைகிற நிலையில் ஜனநாயகத்திற்கானப் போராட்டம் வலிமையாகத் தொடரும் வாய்ப்பு உள்ளது.