நவீன இந்தியர்கள் யாருடைய வம்சாவளியினர்? ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்களா? அல்லது அனைவரும் திராவிடர்களா? அல்லது சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்தவர்களா? இந்த கேள்விகள் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் DNA சான்றுகள் மூலம் கிடைத்த பதில் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஆரம்பக் காலகட்டத்தில் இது தொடர்பான சர்ச்சைகள் எழும்ப காரணமாக இருந்தது இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்கள் தான்.
இந்திய, ஐரோப்பிய மற்றும் பாரசீக மொழிகளின் பொதுவான வம்சாவளியை விளக்குவதை நோக்கமாகக் கொண்டு “ஆரிய படையெடுப்பு கோட்பாடு” முன்வைக்கப்பட்டது. அது ஒரு நம்பகமான கோட்பாடாகத் தென்பட்டாலும், அது இனவெறி கொண்ட ஐரோப்பியர்களால் தவறான கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஆரிய படையெடுப்பு கோட்பாடு கருத்துகள், 1700-களின் பிற்பகுதியில் மொழியியல் அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவுக்கு வந்தது முதல் சமஸ்கிருதம், பாரசீகம், கோதிக், கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டறிய தொடங்கி இருந்தார்.
அந்த அனைத்து மொழிகளுக்கும் ஒரு பொதுவான மொழி இருந்ததாகவும், அவைகள் ஒரு பண்டைய மொழியில் இருந்து (அனைத்து மொழிகளுக்கும் தாய்: இப்போது புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியன் அல்லது PIE என்று அழைக்கப்படுகிறது) வந்தது என்றும் வில்லியம் ஜோன்ஸ் அனுமானித்திருந்தார்.
1800-களின் நடுப்பகுதியில், அறிஞர் மாக்ஸ் முல்லர், இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் பழங்கால மக்கள் காக்கசஸ் மலைத்தொடரில் இருப்பதாக பரிந்துரை செய்திருந்தார். அங்கிருந்து சிலர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்து ஐரோப்பியர்கள் ஆனார்கள் என்றும் மற்றவர்கள் தெற்கே குடிபெயர்ந்து இரண்டாகப் பிரிந்து – ஒரு குழு பெர்சியாவிற்கும் மற்றொரு குழு இந்தியாவிற்கும் படையெடுத்துச் சென்றனர் என்றும் மாக்ஸ் முல்லர் தெரிவித்திருந்தார்.
சமஸ்கிருதம் மற்றும் பண்டைய பாரசீக மொழிகளில் காணப்படும் “ஆர்யா” என்ற வார்த்தையின் மூலம் அந்த மக்களை குறிப்பிட “ஆரியர்கள்” என்ற வார்த்தையை மாக்ஸ் முல்லர் பயன்படுத்தினார்.
பண்டைய பாரசீக மொழிகளுடன் ஒப்பிடுகையில் சமஸ்கிருதம் மொழியில் இருக்கும் ஒற்றுமைகளை முன்வைத்தும் தனது சொந்த கருதுகோளின் அடிப்படையில் மாக்ஸ் முல்லர் இந்த “ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை” முன்வைத்திருந்தார்.
இருப்பினும் அது போன்ற கூற்றுக்கள், ஐரோப்பிய இனக் குழுவை (காகேசியர்கள் அல்லது ஆரியர்கள்) உயர்ந்தவர்களாக காட்ட ஈரான் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து உள்ளூர் இனங்களை அடிபணியச் செய்தனர், என்கிற பொய்யான கருத்தை முன்வைக்கவே இனவாத ஐரோப்பியர்கள் விரும்பியதாக விமர்சிக்கப்படுகிறது.
அந்த கோட்பாடுகளை கீழ்க்காணும் நவீன சான்றுகள் பொய் என நிரூபிக்கச் செய்கிறது:
- சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் முன்னேறிய நாகரிகம்
- ஆரியர் படையெடுப்புக்கான ஆதாரம் எதுவும் இல்லை
- ஆரியர்கள் அதிகாரத்தை கைப்பற்றவில்லை
ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை எதிர்க்கும் வகையில் இந்துத்துவா தேசியவாதிகள் கூறும் மற்றொரு தவறான கோட்பாடு – ‘அனைத்தும் இந்தியாவில் தோன்றியவை’ என்கிற கருத்து.
“ஆரியர்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றினர். அவர்கள் சமஸ்கிருதத்தைக் கண்டுபிடித்தனர், அது எல்லா மொழிகளிலும் மிகச் சிறந்ததாகக் கருதப்பட்டது, மேலும் அவர்கள் மிகச் சிறந்த வேதங்களை எழுதினார்கள். அவர்கள் பின்னர் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, பெர்சியர்கள் மற்றும் ஐரோப்பியர்களை உருவாக்கினர்” என்பது இந்துத்துவா தேசியவாதிகளின் கோட்பாடாக முன்வைக்கப்படுகிறது.
அவர்களின் கோட்பாடு கல்வித்துறையில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, ஏனெனில் அதை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. தொல்பொருள், மரபியல், மொழியியல், மானுடவியல் சான்றுகள் மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் ஆரியர்கள் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்ததாகவே சுட்டிக்காட்டுகின்றன.
இந்துத்துவா தேசியவாதிகளின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளுக்கு நாம் எந்த வகையான ஆதாரத்தை நம்பலாம்?
உதாரணத்திற்கு DNA ஆதாரத்தை எடுத்துக் கொள்வோம்.
2019-ம் ஆண்டு Nature இதழில் வெளியிடப்பட்ட அறிவியலார் நரசிம்மன் மற்றும் பல அறிவியலார்கள் இணைந்து நடத்திய விரிவான ஆய்வில், இந்திய வம்சாவளி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய முக்கிய அறிவியல் ஆதாரங்கள் வெளியாகி இருந்தன.
இந்திய அறிவியல் நிறுவனங்கள் உட்பட 18 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பங்களிப்புகள் இந்த ஆய்வில் அடங்கும்.
இந்த ஆய்வு 19 வெவ்வேறு இடங்களில் இருந்து 12,000 BCE முதல் 1 BCE வரையிலான 800-க்கும் மேற்பட்ட மனித எச்சங்களின் DNA வரிசைகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நவீன இந்தியர்களின் சிக்கலான வம்சாவளியை கண்டறிய உதவியுள்ளது.
“DNA ஆய்வில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள்”
மரபணு கண்டுபிடிப்புகள்:
கடந்த 15 ஆண்டுகளில் பண்டைய DNA வரிசைமுறை(Sequencing) மூலம் குறிப்பிடத்தக்க தகவல்கள் பெறப்பட்டுள்ளது. DNA Sequencing மூலம் நடந்த ஆய்வின் படி, மனித இடம்பெயர்வு நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள்தொகை இடம்பெயர்வு/Population Movements:
3 வகையிலான அல்லது காலகட்டத்திலான இடம்பெயர்வு இனங்களின் DNA-வை தற்கால இந்தியர்கள் கொண்டுள்ளனர்.
- தெற்காசியத் தொல்மரபியல் (AASI): 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து, இந்தியா வழியாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா வரை இடம்பெயர்வு நடந்ததுள்ளது.
- மத்திய-கிழக்கு விவசாயிகள் இடம்பெயர்வு (ஈரானிய விவசாயிகள் குழு) IVC: 6,000-4,000 BCE காலகட்டத்தில் நவீன ஈரானில் இருந்து இந்திய துணை கண்டத்திற்கு இடம்பெயர்ந்து, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பங்களித்தது தெரியவருகிறது.
- ஸ்டெப்பி ஹெர்டர்ஸ்: 1800-1500 BCE காலகட்டத்தில் உக்ரைன்/கஜகஸ்தானில் இருந்து இடம்பெயர தொடங்கிய ஒரு இனக் குழு(ஆண்கள் மட்டும்), ஒரு பிரிவு மேற்கு ஐரோப்பாவிற்கும், மற்றொரு குழு தெற்கே சென்று தஜிகிஸ்தானை அடைந்ததும் இரண்டாகப் பிரிந்து – ஒன்று ஈரானுக்கு மற்றொன்று இந்தியாவுக்குச் சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது.
சான்றுகளின்படி, அங்கிருந்து வந்த ஆண்கள் குழு குதிரைகள் மற்றும் இரதம் (உள்ளூர் மக்களிடம் இல்லை), சமஸ்கிருத மொழி மற்றும் வேத மதம் உள்ளிட்டவைகளை இந்திய துணை கண்டத்திக்கு கொண்டு வந்ததாக ஆய்வில் உறுதிபடுத்தப்படுகிறது. ‘அவர்களுடன் கொண்டு வராதது அவர்களின் பெண்களையே’ எனவும் Nature இதழில் வெளியான ஆய்வு மூலம் தெரியவருகிறது.
நவீன DNA கூறுகள் நமது இந்திய ஆண் வம்சாவளியை (Y-குரோமோசோமில் உள்ள மரபணு குறிப்பான்கள் மூலம்) நமது பெண் வம்சாவளியிலிருந்து மாறுப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது எதைக் காட்டுகிறது? பெரும்பாலான நவீன இந்தியர்களின் பெண் மரபணுக்கள்(DNA), ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த தெற்காசியத் தொல்மரபியலில் (AASI) இருந்து வந்தது என்பதை காட்டுகிறது.
ஆண் DNA-வின் அளவு 2 விஷயங்களைப் பொறுத்து மாறுபடுகிறது:
- வடக்கு-தெற்கு
- சாதி
பண்டைய மனிதர்களின் மரபணு குறிப்பான்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 வெவ்வேறு இந்தியக் குழுக்களின் DNA-உடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.
1800-1300 BCE காலகட்டத்தில் உக்ரைன்/கஜகஸ்தானில் இருந்து வந்த ஸ்டெப்பி ஹெர்டர்ஸ் ஆண் இனக் குழு இந்தியாவிற்கு வந்து உள்ளூர் மக்களுடன் இனச்சேர்க்கை செய்ய ஆரம்பித்ததாக ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
அது ஒரு ஆரிய படையெடுப்பு அல்ல; அவர்கள் இந்தியாவை கையகப்படுத்தவில்லை, என்பது இதில் இருந்து தெரியவருவதாக அனுமானிக்கப்படுகிறது.
உண்மையில், எந்தவொரு இந்தியரிடமும் ஸ்டெப்பி ஹெர்டர் DNA-வின் அதிகபட்ச அளவு 30%-க்கு மேல் இல்லை என்பதும் மீதமுள்ளவை IVC மற்றும் AASI மரபணுக்கள்(DNA) தான் என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியர்களுடன் (10% மட்டுமே) ஒப்பிடும்போது வட இந்தியர்களுக்கு (30% வரை) ஸ்டெப்பி ஹெர்டர் DNA அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் உள்ள உயர் சாதியினரை, மற்ற சாதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமான ஸ்டெப்பி ஹெர்டர் DNA-வைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கஜகஸ்தான்/உக்ரைனில் இருந்து வந்த ஸ்டெப்பி ஹெர்டர்ஸ் ஆண் இனக்குழு (ஐரோப்பிய அறிஞர் மாக்ஸ் முல்லர் கூறியது போல காக்கசஸ் மலைத்தொடரில் இருந்து அல்ல) இந்தியாவிற்குள் வந்து, உள்ளூர் பெண்களுடன் இனச்சேர்க்கை செய்ததும், பிறகு அவர்கள் தங்களை உயர் சாதியினராக அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதும் ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன இந்தியர்களின் மரபணு கலவை:
இந்திய ஆண்களின் DNA:
- வட இந்தியர்கள்: 40% IVC ஈரானிய விவசாயிகள் இனக்குழு DNA, 30% AASI ஆப்பிரிக்க இனக்குழு DNA, 30% ஸ்டெப்பி ஹெர்டர் DNA
- தென் இந்தியர்கள்: 50% AASI ஆப்பிரிக்க இனக்குழு DNA, 40% IVC ஈரானிய விவசாயிகள் இனக்குழு DNA, 10% ஸ்டெப்பி ஹெர்டர் DNA
இந்திய பெண்களின் DNA பெரும்பாலும் AASI ஆப்பிரிக்க இனக்குழுவை சேர்ந்தவை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆரிய படையெடுப்புக் கோட்பாடு மற்றும் இந்துத்வ தேசியவாதகளின் கூற்றுகளை பொய்யாக்கி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல இனக்குழுக்கள் இடம்பெயர்ந்தும் இனச்சேர்க்கை நடந்தும், பல வகையில் சிக்கலான வம்சாவளியை நவீன இந்தியர்கள் கொண்டுள்ளனர் என்பதே ஆய்வு கூறுகிறது.