
இந்தியா ஸ்கில்ஸ் -2024
நான் முதல்வன் திட்டத்தால் 40 பதக்கங்களை குவித்து தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தேசிய திறன் போட்டியில் தமிழ்நாடு 21 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பின்னர் நடப்பாண்டில் 40 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.

‘இந்தியா ஸ்கில்ஸ் – 2024’ எனும் இந்தியாவின் மிகப்பெரிய திறன் போட்டி கடந்த மே 15-ம் தேதி முதல் 4 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இந்திய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் டெல்லி துவாரகாவில் யஷோபூமியில் இது நடந்துள்ளது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நடந்த இந்த திறன் போட்டியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ளனர்.
மொபைல் ரோபோடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பம் சார்ந்த திறன் போட்டிகள் நடந்ததில், 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 86 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம், 17 சிறப்பு பதக்கங்கள் என்று 40 பதக்கங்களை குவித்துள்ளனர்.

இந்த திறன் போட்டியில் இந்திய அளவில் ஒடிசா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் 2ம் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது.
இதில், தங்கம் வென்ற 6 தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள உலக திறன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரானஸ் நாட்டில் நடைபெறும் உலக திறன் போட்டியில் 1,500 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழ்நாட்டின் 6 பேருக்கு சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.