முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உள்நாட்டு விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் தவறன கொள்கையினால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினால், நாட்டின் முக்கிய சேவைகள் தனியார் வசம் சென்றால் பொதுமக்கள் எவ்வாறு இன்னலுக்கு ஆளாகுவார்கள், பொருளாதாரம் எவ்வாறு சீர்குலையும் என்பதை ‘இண்டிகோ’ நிறுவனம் உணர்த்தி இருக்கிறது.

இண்டிகோ, ஏர் இந்தியா என்று இரண்டு நிறுவனங்கள் மட்டுமே விமானத்துறையில் கோலோச்சும் நிலையில் இண்டிகோ விமான சேவை முடக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். நாடே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. விமானம் ரத்து ஆனதால் புதுமண ஜோடி ஆன்லைன் மூலம் ரிசப்ஷனில் பங்கேற்க வேண்டியதாகி இருக்கிறது. மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர். கல்வி தொடர்பாக பல மாணவர்களும், தொழிலதிபர்களும் பாதிப்படைந்துள்ளனர். நாட்டின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்துக்கிடந்து அல்லாடிக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

அரசு சார்பாக விமான சேவை இல்லாமல் போனதுதான் இந்த அவல நிலைக்கு காரணம். அரசு சார்பில் இயங்கி வந்த விமானத்துறையை தனியாருக்கு ஒன்றிய பாஜக அரசு தாரைவார்த்தது மட்டுமல்லாமல், விமானதுறையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. அதுதான் இன்றைக்கு நாடு சந்திக்கும் கொடுமைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு நடத்து சேவை என்றால் பொதுநலனே முதன்மையாக கருதப்பட்டிருக்கும். தனியார் சேவை என்பதால்தான் லாபம் மட்டுமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பொதுநலன் இல்லாது லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் போதுதான் பணியாளர் குறைப்பு, செலவு சுருக்கம், சேவை குறைப்பு உள்ளிட்டவை மேலோங்கி நிற்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாது நாட்டின் முக்கிய சேவைகளை அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
இதே நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் தடுமாறி, உலகில் இந்தியாவின் மீதான நம்பிக்கை குறையும் அபாயம் இருக்கிறது.
மக்கள் நலனை சிந்திக்காமல் தேசிய சொத்துக்களை எல்லாம் தனியார் கைகளில் திணித்து சேவை நாடு என்பதை மாற்றி இந்தியாவை சந்தை நாடாக மாற்றி இப்படி மக்களை பாடாய்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

ஒரு துறையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினால் அது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பொருந்தாது. ஆனால், ஒன்றிய பாஜக அரசினால் நாட்டின் பொருளாதாத்திஉல் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருக்கிறது. போட்டி இல்லாததால் அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவார்கள். மக்களை ஆட்டிவைப்பார்கள். அப்படித்தான் விமானத்துறையும் ஆகிவிட்டது.
இதைத்தான் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சுட்டிக்காட்டுகிறார். அவர், ‘’இந்திய விமானத்துறை மிக துடிப்பாகவும் போட்டிகள் கொண்டதாகவும் இருந்தது. அது எப்படி இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப்போனது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்’’ என்கிறார். எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும், ‘’விமானத்துறையை ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தின் பாஜக விட்டதன் விளைவுதான் விமானப் போக்குவரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமையக்கூடாது’’ என்கிறார்.

அண்மைக்காலமாக நடந்த சில விமான விபத்துகளுக்கான காரணங்களை அறிந்த போது விமானிகளுக்கு ஏற்பட்ட பணிச்சுமையின் காரணமாகவே மன உளைச்சலில் அதிக விபத்துகள் ஏற்பட்டதாக தெரியவந்ததன் அடிப்படையிலேயே , பயணிகள், விமானப் பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் FDTL (Flight Duty Time Limit) எனும் புதிய விதியை கொண்டு வந்தது. அதாவது விமானிகளுக்கான வாராந்திர விடுப்பு நேரத்தை அதிகப்படுத்தியது. அவர்களுக்கு அதிக ஓய்வு கொடுத்தால்தான் பயணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதால்தான் இந்த விதிகள் விதிக்கப்பட்டன. விமானிகள் எவ்வளவு நேரம் பறக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பற்றியது இந்த புதிய விதி. இதனால் கூடுதல் விமானிகளை நியமிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானது இண்டிகோ நிறுவனம்.
கூடுதல் விமானிகளை நியமித்து அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிளாக் மெயில் செய்து மத்திய அரசையே விதிகளை வாபஸ் வாங்க வைத்திருக்கிறது இண்டிகோ நிறுவனம்.

கட்டுப்பாடுகள் விதித்தால் என்னவாகும் என்பதை காட்டி ஒன்றிய அரசை மிரட்டி பணிய வைத்திருக்கிறது இண்டிகோ நிறுவனம். இண்டிகோவின் மிரட்டலுக்கு பயந்து இரவோடு இரவாக விதிமுறைகளை வாபஸ் வாங்கி பின் வாங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. இது வரன் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாகிவிட்டது.
விமான பயணத்திற்கு செலுத்திய கட்டண பணத்தை கூட முழுமையாக இண்டிகோ நிறுவனம் திருப்பி தரவில்லை என்று மக்கள் குமுறுக் கொண்டிருக்கிறார்கள். அழுத்தங்களின் காரணமாக ஒருவேளை திருப்பி தருவதாகச் சொன்னாலும் கூட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இண்டிகோ நிறுவனத்தாலும், ஒன்றிய அரசாலும் சரி செய்ய முடியுமா? என்று எழும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இவர்கள்.
