இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி (PRICE) அமைப்பு வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சில முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், 2023-ம் ஆண்டின் இந்திய வருமான சமத்துவமின்மை குறியீடு 1950-களில் இருந்ததை விட அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் மற்றும் PRICE ஆகிய சிந்தனைக் குழுக்களால் நடத்தப்பட்ட குடும்ப வருமான ஆய்வுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்திய வருமான சமத்துவமின்மை மீதான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வருமான சமத்துவமின்மையின் புள்ளிவிவர அளவீடுகளை கூறும் ‘ஜினி குறியீடு’ (Gini Coefficient), 2023-ம் ஆண்டில் 0.410 ஆகவும், இதே குறியீடு 1955-ம் ஆண்டில் 0.371 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜினி குறியீடு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குள் தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்கு இடையேயான வருமானப் பகிர்வு எந்த அளவுக்குச் சமமான பரவலில் இருந்து விலகுகிறது என்பதை அளவிடுகிறது.
ஜினி குறியீடு ‘பூஜ்யம் (0)’ அளவில் இருந்தால் சரியான சமத்துவத்தைக் குறிக்கிறது என்று பொருள்; அதே சமயம், ஒன்று (1) என்ற அளவுக்குச் சென்றால் ஜினி குறியீடு சரியான சமத்துவமின்மையைக் குறிக்கிறது என்று பொருள்படும்.
இந்திய கிராமப்புறங்களில், ஜினி குறியீடு 2023-ல் 0.405 ஆகவும், 1955-ல் 0.341 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில், சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சிப் பலன்கள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யலாம்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட அடிமட்ட 10 சதவீத குடும்பங்களின் வருமானத்தின் பங்கு கடந்த 1955-ல் 3 சதவீதமாக இருந்த நிலையில், அது 2023-ல் 2.38 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதே நேரம் நாட்டின் அடிமட்ட 50 சதவீத குடும்பங்களின் வருமானத்தின் பங்கு, 22 சதவீதத்தில் இருந்து 22.82 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களால் அடிமட்ட 50 சதவீதத்தினரின் வருமானப் பங்கில் சிறிதளவு உயர்வுக்கு வழிவகுத்துள்ளன” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
PRICE Working Paper: Evolution of Income Inequality in India Since Independence