இன்டர்செக்ஸ் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே இன்டர்செக்ஸ் குழந்தைகளுக்கு எதிரான அறுவை சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி மனுதாரர் வாதிட்டிருந்த நிலையில், இந்த பொதுநல வழக்கை முக்கிய வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண் அல்லது பெண் என்ற பொதுவான வரையறைகளுக்கு பொருந்தாத உடல் அமைப்புகளுடன் பிறக்கும் இண்டர்செக்ஸ் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கக் கோரும் வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘Intersex: தமிழில் ‘ஊடுபாலினம்’ அல்லது ‘இடைநிலைப் பாலினம்’ என அழைக்கப்படுகிறது’
இண்டர்செக்ஸ் குழந்தைகளுக்கு முறையான விதிகள் இல்லாமல் அவர்களின் பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சைகளுக்குத் தடை விதிக்கவும், சக குடிமக்களைப் போல அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதை உறுதி செய்யவும் பொதுநல வழக்கில் கோரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதை முக்கிய வழக்காக எடுத்துக் எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த பொதுநல வழக்கில் ஒன்றிய உள்துறை, சமூக நீதித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சட்டம் மற்றும் நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகங்களை எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாடி உச்ச நீதிமன்றத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.