கொல்கத்தா மற்றும் விதாநகர் பகுதிகளில் மத்திய அமலாக்கத் துறை (ED) வியாழக்கிழமை நடத்திய சோதனைகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பண மோசடி வழக்குடன் தொடர்புடையதாக, அரசியல் ஆலோசனை நிறுவனம் I-PAC-க்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. சால்ட் லேக் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 11-ம் மாடியில் அமைந்துள்ள I-PAC அலுவலகம், அதன் இயக்குநர் பிரதிக் ஜெயினின் லௌடன் ஸ்ட்ரீட் இல்லம் மற்றும் பூர்ராபஜார், போஸ்டா பகுதியில் உள்ள ஒரு வர்த்தகரின் அலுவலகம் ஆகிய இடங்களில் ED சோதனை செய்தது.
இந்த சோதனைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி (Mamata Banerjee), பிரதிக் ஜெயினின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கிருந்து அவர் ஒரு ஆவணத்தை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறிய காட்சிகள் பரவலாக வெளியாகின. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், I-PAC அலுவலகமும் அதன் தலைவர் இல்லமும் சோதனை செய்யப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், ED (Enforcement Directorate) தங்களது கட்சியின் அனைத்து தகவல்களையும் சேகரிக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, பிரதிக் ஜெயின் தமது கட்சியின் பொறுப்பாளி என்றும், அவரிடம் தொலைபேசியில் பேசினேன் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும், “நான் கட்சியின் ஆவணத்தை எடுத்துள்ளேன் என்றும் ED எங்கள் கட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள், வேட்பாளர் பட்டியல் மற்றும் உள்ளக தகவல்களைப் பெற முயற்சிக்கிறது என்றும் இது ED-யின்அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கடமையா?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். மேலும், அவர் கையில் பச்சை நிற ஆவணமும், ஒரு ஹார்ட் டிரைவும் இருப்பதையும் காட்டினார். தொடர்ந்து, “நான் பாஜக கட்சி அலுவலகத்தை சோதனை செய்தால் என்ன நடக்கும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிராக, மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். I-PAC (Indian Political Action Committee) ஒரு தனியார் நிறுவனமாகும் என்றும், அதன் அலுவலகங்களில் ED சோதனை நடத்துவது சட்டபூர்வமானது என்றும் அவர் கூறினார். ஆனால் முதல்வரும் கொல்கத்தா போலீஸ் கமிஷனரும் மத்திய விசாரணையில் தலையிட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இதற்காக ED முதல்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். I-PAC கட்சி அலுவலகம் அல்ல, அங்கு கட்சி ஆவணங்கள் இருப்பது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார்.இந்த சம்பவம், மேற்கு வங்க அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும், மத்திய – மாநில மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, அத்துமீறி நுழைதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ED அதிகாரிகளுக்கு எதிராக மேற்கு வங்க காவல்துறை மூன்று தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
