ஈரான் அதிபர் சையத் இப்ராகிம் ரைசி மரணத்தால் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம் எந்த வகையில் எல்லாம் பாதிக்கும்? பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும்? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் சையத் இப்ராகிம் ரைசி உயிரிழந்தது மற்றும் சவுதி அரசரின் ஜப்பான பயண திடீர் ரத்து ஆகிய இரண்டு காரணங்கள் சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங் மேக்கராக இருந்த சையத் இப்ராகிம் ரைசி மரணத்தால் கச்சா எண்ணெய் விலை திடீரென்று உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய், தங்கம், பங்குச்சந்தை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இது பங்குச்சந்தையினை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
சர்வதேச சந்தையில் முக்கிய பென்ச் மார்க் எண்ணெய்யான பிரெண் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு 32 சென்ட் அதிகரித்து 84.30 டாலர் ஆக உயர்ந்தது. மே-10ம் தேதிக்கு பின்னர் பதிவான அதிகபட்ச விலைதான் இது. அதே போன்று, அமெரிக்காவின் wti கச்சா எண்ணெய் விலையானது ஒரு பேரலுக்கு 80.11 டாலராக அதிகரித்தது. மே-1ம் தேதிக்கு பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகும் இது. wti கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு காரணம் இப்ராகிம் ரைசியின் மரணமே காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இதுகுறித்து ஐஜி மார்க்கெட்ஸ் பகுப்பாய்வாளர் டோனி சைக்காமோர், wti கச்சா எண்ணெய்யின் விலை 200 நாள் சராசரி விலையான 80.02 என்கிற டாலர் அளவீட்டினைத் தாண்டிய பின்னர் 83.50 டாலர் வரை மேலும் உயரும் என்கிறார்.
கச்சா எண்ணெய்யின் இந்த விலை உயர்வினால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. ஆனால், மக்களவைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலைய்ல் தற்போது இந்த விலையேற்றம் இருக்காது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் இந்த விலையேற்றம் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஈரான் எண்ணெய் உற்பத்தியில் சீர்குலைவு ஏற்பட்டால் சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்பதோடு அல்லாமல், விலையும் பாதிக்கும். இதனால் ஈரான், வளைகுடா நாடுகள் மட்டும் அல்லாது உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடித்தான் ஓடுவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களின் தேவை அதிகரிக்கும். தங்கம் மீது அதிக முதலீடு செய்யப்படும். இதனால் தங்கம் விலை கடுமையாக உயரும் என்கிற நிலை இருக்கிறது. இதை ஈரான் அதிபரின் மரணத்திற்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்திருப்பது உறுதி செய்கிறது.
சையத் இப்ராகிம் ரைசியின் மரணத்தால் இன்னொரு பிரச்சனையினையும் சந்திக்க இருக்கிறது இந்தியா. ஈரான் சபாஹார் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈரானுடன் இந்தியா கையெழுத்திட்டதுதான் இந்திய அரசு, மத்திய ஆசிய நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. 20003ம் ஆண்டில் முதன் முதல் இத்திட்டத்தை இந்தியா முன்மொழிந்த நிலையில், ஈரானின் சந்தேகத்திற்கு உரிய அணுசக்தி நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்க தடைகள் காரணமாக துறைமுகத்தின் வளர்ச்சி தடைபட்டது. இதன் பின்னர் கடந்த வாரம் சபாஹார் துறைமுகத்திற்காக ஈரான் -இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விமர்சித்திருந்தது. ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருப்பவர்கள் மீது தண்டனை விதிக்கப்படலாம். ஈரானில் முதலீடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் எச்சரித்திருந்தார். ஆனாலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த ஒப்பந்தத்தின் நன்மைகளை வலியுறுத்தி இருந்தார். இந்த திட்டம் அனைவரின் நலனுக்கானது. இதனை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் என்று நினைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தம் நடந்த சில தினங்களில் ஈரான் அதிபரின் மரணம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. சையத் இப்ராகிம் ரைசியின் மரணம், இந்த ஒப்பந்த திட்டத்தில் தாக்கம் ஏற்படலாமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.