பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் மீது ஈரான் ராணுவம் குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான Jaish-Al-Adl என்கிற சலாபி-பலூச் பிரிவினைவாத அமைப்பு, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
ஈரானின் ‘சீசுத்தானும் பலுச்சிசுத்தானும்’ மாகாணம்
ஈரானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, ஈரானின் ‘சீசுத்தானும் பலுச்சிசுத்தானும்’ என்கிற மாகாணத்தை தனி நாடாக கேட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள ‘பலூசிஸ்தான்‘ மாகாணத்தை தனி நாடாக கேட்டு பாகிஸ்தானின் உள்ளூர் கிளர்ச்சிக் குழுக்கள் பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் ‘பலூசிஸ்தான்’ மாகாணம்
இந்த சூழலில், பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் கிளர்ச்சிக் குழுக்களுடன் சேர்ந்து Jaish-Al-Adl அமைப்பு தனது தீவிரவாத நிலைகளை அந்நாட்டில் ஏற்படுத்தி ஈரானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
கடந்த 2023 டிசம்பர் மாதத்தில், ஈரானின் ராஸ்க் நகரில் உள்ள காவல்நிலையத்தின் மீது Jaish-Al-Adl அமைப்பு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில், சுமார் 12 ஈரானிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில் தான், பாகிஸ்தானில் உள்ள Jaish-Al-Adl அமைப்பின் நிலைகள் மீது நேற்று ஈரான் ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதலால் தீவிரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
ஈரான், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானில் ‘பலூச்’ தேசிய இனக் குழுக்கள் வாழ்கின்றனர்
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறியது ஏற்கமுடியாத ஒன்று என எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனை என்றும் அதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இதுபோன்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் பாதிப்பையும் நம்பகத்தன்மையை இழக்கவும் செய்யும் எனவும் பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.