பொதுக்குழுவில் எப்படியும் ஒருங்கிணைப்பு குறித்து பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கு கொஞ்சமும் சாத்தியமே இல்லை என்கிற விதமாக விலக்கப்பட்டவர்களை ‘துரோகிகள்’ என்று ஏகத்துக்கும் சாடினர் நிர்வாகிகள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அதிமுகவில் இருந்து 2021ல் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் பங்கேற்றிருந்தார் என்பதுதான்.
திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் மற்றும் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த நிலோபர் கபில் அதிமுக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக சொல்லை கோடிக்கணக்கான பணத்தை தன் உதவியாளர் பிரகாசம் மூலம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துவிட்டார் என்று புகார் எழுந்தது. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவதாக பிரகாசமே சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் விவகாரம் பெரிதானதில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டது.

உடனே, எடப்பாடி மீதும்தான் ஊழல் புகார் இருக்கிறது என்று நிலோபர் கபில் கொந்தளித்தார். திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வீரமணிக்கும் நிலோபர் கபிலுக்கும் நெடுங்காலமாக வாய்க்கால் தகராறு வேறு கனன்று கொண்டிருந்தது. வீரமணியும் திமுக துரைமுருகனும் மாமன் மச்சான் என்று சொன்னதால்தான் அதிமுகவில் வெடித்தது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் அவர் திமுகவில் சேரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று எந்த அறிவிப்பும் வராத நிலையில் அவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வீரமணியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்றது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி.
