
இந்த முறை டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றதில் எலான் மஸ்க்கின் பெரு முயற்சி இருந்ததை ட்ரம்புவே வெளிப்படையாக அறிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல் தேர்தல் நிதியையும் வாரி வாரி இறைத்திருந்தார் எலான் மஸ்க். அதனால்தான் ட்ரம்ப் அதிபர் ஆனவுடன் தனது அரசில் செயல் திறன் துறையில் தலைமை ஆலோசகர் பொறுப்பினை எலான் மஸ்கிக்கிற்கு வழங்கி அழகு பார்த்தார் ட்ரம்ப். தேர்தல் வெற்றிக்கு முன்னர் இருவருக்கு இடையே இருந்த நட்பு தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட கருத்து மோதல் ஏற்பட்டு எலான் மஸ்க் இன்று தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு போயிருக்கிறது. இப்பவும் இந்த மோதல் தொடர்கிறது. எலான் மஸ்க்கின் கட்சியை கலாய்த்து தள்ளுகிறார் ட்ரம்ப்.

’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா என்பது ட்ரம்பின் பெரும் கனவு. எல்லோரும் மின்சார கார்களை வாங்க வேண்டும் என்கிற எலான் மஸ்க்கின் திட்டத்திற்கு எதிரானது என்பதால் இதில் துளி கூட எலான் மஸ்க்கிற்கு இஷ்டமில்லாமல் இருந்ததுதான் இருவரும் மோதல் வலுத்து வந்ததற்கு காரணம். மக்களுக்கு எது விருப்பமோ அதை வாங்கட்டும் என்று ட்ரம்ப் இருந்ததால் இந்த மோதல் வலுத்தது.
’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் புது கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். அதன்படியே ’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும்
புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து கேட்பு அறிவிப்பினை செய்திருந்தார் எலான் மஸ்க். இதில் 1.2 மில்லியன் பயனர்கள் கட்சி தொடங்கலாம் என்று பதிலளித்திருந்தனர்.
இதையடுத்து ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு கட்சிகள் மட்டுமே அதிகாரத்துடன் இருந்து வரும் நிலையில், இது ஜனநாயக விரோதப்போக்கு. இதை முறியடிப்போம் என்கிறார் எலான் மஸ்க்.
ஆனால் ட்ரம்ப், ‘’இங்கே இரு கட்சி அமைப்பாகவே இருந்து வருகிறது. இதில் மூன்றாவதாக ஒரு அமைப்பு வருவது தேவையற்ற குழப்பத்தையே அதிகரிக்கும் என்று தெரிகிறது. இது அபத்தமானது என்றே நான் நினைக்கிறேன்’’ என்கிறார். அவர் மேலும், ‘’விபத்துக்குள்ளான ரயில்தான் எலான் மஸ்க்கின் கட்சி. முற்றிலும் தண்டவாளத்தில் இருந்து எலான் மஸ்க் விலகிச் செல்வதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர் தடம் மாறிச் செல்கிறார். நிச்சயமாக இங்கே மூன்றாவது வெல்வதற்கு வாய்ப்பே இல்லை’’ என்கிறார்.