தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா இருக்கிறார். இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். இவர் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசும்போது கடுமையாக விமர்சித்தார்.
தவெக ஒரு தூய கட்சி என்று விஜய் சொன்னதால், ’’நீ எப்படி தூய்மையான கட்சி ஆக முடியும். நீ இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. உன்னுடைய நடவடிக்கை என்ன என்று தெரியாது. ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை எப்படி ஒழுக்கமாக நிறைவேற்றுவாய் என்று தெரியாது. கட்சி ஆரம்பிக்கும் போது ரசிகர்களை வைத்து ஆரம்பித்தாய். அதை வேண்டுமானால் தனித்தன்மை கட்சி என்று சொல்லலாம்.

பல்வேறு கட்சியில இருந்தும் உன்கிட்ட வந்திருக்காங்க. அப்படி வந்தவங்க எல்லோருக்ம் சந்தர்ப்பவாதிகள். உன்னோட கொள்கை பரப்பு செயலாளர் யாரு? லாட்டரி டிக்கெட் விக்குறவன். இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விக்குறவன். அதே மாதிரி அதிமுகவுல இருந்து ஒரு ஆளு போயிருக்காரு. இந்த செங்கோட்டையன் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று சொல்லிவிட்டு இப்ப விஜயை புரட்சித்தளபதின்னு சொல்லுறார்’’என்று ஆவேசப்பட்டிருந்தார்.
இதை வன்மையாக கண்டித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. ’’கே.பி.முனுசாமி பேசும்போது இந்தியா முழுவதும் கள்ள லாட்டரி விற்பனை செய்பவரின் மருமகன் விஜய் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார் என்று பேசியிருந்தார். ஆனால் இன்று வெளியான “Times Of India” செய்தியில் அதிமுகவும் மார்ட்டினிடம் இருந்து பெரிய அளவு நிதி ஆதாரத்தை பெற்றிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. கே.பி.முனுசாமிக்கு இது தெரியாதா? அல்லது தெரிந்தும் இப்படி பேசுகிறாரா? இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த கள்ள லாட்டரி மார்ட்டினை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து கள்ள லாட்டரியை ஒழித்தார். ஆனால் அந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்தும் எடப்பாடி ஊழலில் பயணிக்கிறார். இது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை வழிநடத்துகிற செயலா?
மக்கள் மன்றத்தில் இதற்கான பதிலளிக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது’’என்கிறார் கடுமையாக.
