தேமுதிக எந்த கூட்டணியோடு சேர்கிறதோ அந்த கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறது. உறுதியாக இருக்கிறோம், தெளிவாக இருக்கிறோம். இந்த முறை மாபெரும் வெற்றிக்கூட்டணியை அமைத்தே தீருவோம் என்று காரைக்குடியில் தேமுதிகவினரையே உணர்ச்சி பொங்கப்பேசினார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
நேற்று அவர் பரப்புரைக்கூட்டத்தில் பேசும்போது மேலும், ’’இன்றைக்கு தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன. யார் யாரெல்லாம் இருக்கிறார்கள். நேற்று முளைத்த காளான் எல்லாம் எடுபடாது. ஒருநாள் மழைக்கே அது தாங்காது. தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம்.
கடை கடையாக சென்று வசூல் செய்யும் கட்சியோ, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சியோ அல்ல தேமுதிக. ஆளுங்கட்சி பூத் கமிட்டி அமைப்பது பெரிய விசயமல்ல. 63 ஆயிரம் பூத் கமிட்டி அமைத்த ஒரே கட்சி தேமுதிகதான்.

நேற்று முளைத்த காளான்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இங்கு வந்த கூட்டம் தானாக வந்த கூட்டம். சிலர் மக்கள் வெள்ளம் அதிகமாக உள்ளது போல் பக்கத்து தொகுதியில் இருந்தெல்லாம் கூட்டத்தை கூட்டி வந்து ஏமாற்றுகின்றனர்’’ என்று கூறினார்.
நேற்று முளைத்த காளான் என்று பிரேமலதா சொன்னதும், புதிதாக கட்சி தொடங்கி முதலமைச்சராவேன் என்று சொல்லி வரும் விஜயைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
பக்கத்து தொகுதிகளில் இருந்து கூட்டத்தை கூட்டி வந்து கூட்டத்தை காட்டுகின்றனர் என்று பிரேமலதா விமர்சித்ததும் கூட, கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்டத்தை காட்ட, டெம்போவில் ஆட்களை திரட்டிக் கொண்டு வந்தார்கள் என்கிற விபரம் வெளியான நிலையில், தவெகவைத்தான் பிரேமலதா விமர்சித்திருக்கிறார் என்று சொல்லி வந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு திடீரென்று ’’நேற்று முளைத்த காளான் என்று விஜயை நான் சொல்லவில்லை. அவர் எங்கள் வீட்டுப்பிள்ளை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என்று நான் குறிப்பிட்டதில்லை. சினிமாவைப்போல் ஆரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரேமலதா அந்தர் பல்டி அடிக்கிறாரா? என்ற விமர்சனமும் இருக்கத்தான் செய்கிறது. விஜயை நேற்று முளைத்த காளான் இல்லை என்று சொல்லவில்லை என்றால் வேறு யாரைச்சொன்னார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று, நடைபெற இருக்கும் தேமுதிக மாநாட்டில் துரோகம் இழைத்தோருக்கு பாடம் புகட்டுவோம் என்று ஆவேசப்பட்டுள்ளார் பிரேமலதா. இதன் மூலம் பழனிசாமியைத்தான் நேற்று முளைத்த காளான் என்று சொல்லவருகிறார் என்று தெரிகிறது. முதுகில் குத்திவிட்டார் என்று முன்பு சொன்ன பிரேமலதா இப்போது நேற்று முளைத்த காளான் என்று சாடுகிறார்.
கூட்டணி தர்மத்தின் படி தேமுதிகவுக்கு எம்.பி. சீட் ஒதுக்காததால்தான் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொல்லாமல், ஜனவரி மாதம் கூட்டணியை பற்றி சொல்கிறோம் என்று சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டே வருகிறார் பிரேமலதா.
பழனிசாமி, அதிமுகவில் நீண்டகாலம் இருந்து வந்தாலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனது எல்லாம் இப்போதுதான் என்பதால், அவரைத்தான் நேற்று முளைத்த காளான் என்று சாடுகிறாரா பிரேமலதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
