
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த ஆடு, மாடுகளின் மாநாட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ஆடு,மாடுகள் மனித இனத்தோடு ஒன்றி இருப்பது குறித்தும், அவை மனித வாழ்வின் தேவையாக இருப்பது குறித்தும் சொன்னார்.
அந்த ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு உரிய நிலங்கள் இல்லை என்றும், சாயக் கழிவுகளால் கால்நடைகள் குடிக்க தண்ணீரின்றி தவிக்கின்றன என்றும் எடுத்துச்சொன்னார்.

‘’ஆடு , மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல; அது வெகுமானம் என்பதை உணராத வரையிலும் நாட்டில் பொருளாதாரம் வளராது’’ என்றார்.
அவர் மேலும், ‘’ஆடு,மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரையிலும் பட்டினி கிடையாது’’ என்று சொன்னவர், ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று தேனி மலையடிவாரத்தில் நானே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போவேன்’’ என்றார்.
சீமானின் இந்த பேச்சு குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம் என்கிறார் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.

’’ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆரியக் கோட்பாடான குலக்கல்வித் திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் நடத்தியுள்ளார்.
பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக் கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான்’’ என்று சொல்லும் வன்னியரசு,

’’மாடுகளை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ் . கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.
பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும் மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும்குடி பெருமையின் உச்சம்.சாதி வெறியின் எச்சம்’’ என்கிறார்.

’’மாடுகளை மேய்க்கவும் பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா?அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா?’’ என்ற கேள்விகளையும் எழுப்புகிறார் வன்னியரசு.