
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கிய சசிகலா, அதே வேகத்தில் அவரிடம் இருந்து அடித்து பிடுங்கிக்கொண்டார். இதையடுத்து தானே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக முதற்கட்டமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.
இதன் பின்னர் அவர் கொஞ்சமும் நினைத்து பார்த்திராத வகையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும்போது அவர் ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார். அது என்ன சத்தியம்? அது என்னாச்சு?
சிறையில் இருந்து வெளியே வந்ததும், பெங்களூருவில் இருந்து சென்னை தி.நகர் வரையிலும் பேரணியாக வந்தார் சசிகலா.

கூவத்தூரில் தனது காலில் விழுந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியை பறித்து தன்னை அதிமுகவில் இருந்தே நீக்கியத்தோடு அல்லாமல், சிறையில் இருந்து வந்ததும் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தக்கூட முடியாதபடி நெருக்கடி கொடுத்ததால், அடுத்தடுத்து என ஆட்டத்தை பார்க்கத்தான் போகிறீர்கள் என்று ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜித்தார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக எடுக்காமல் அமைதியாக உள்ளார் சசிகலா. தனக்கு இத்தனை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு ஆவேசக்குரல் கூட ஏன் எழுப்பாமல் இருக்கிறார் சசிகலா?

மாறாக, எல்லோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், தன்னை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஏன் எடப்பாடியிடம் பம்முகிறார்? எகிறி அடிக்க தயங்குகிறார்? என்று எழும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சசிலாவுடன் பயணித்து வந்த வெண்மதி.
சசிகலாவின் நிழல் போலவே பல காலம் இருந்தவர் வெண்மதி. சசிகலாவின் சுற்றுப்பயணிகளின் போது அவருடன் பயணித்து செய்தியாளர்களின் பேட்டியின் போது சசிகலா பேட்டி கொடுக்கும் போது அருகில் நின்று வெண்மதி கொடுத்த முக பாவனைகள் வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இதன் காரணமாகவே சசிகலாவிடம் சற்று தள்ளி இருக்கிறார் வெண்மதி.

நெல்லை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் இணை செயலாளரான வெண்மதி தற்போது தற்போது எம்.ஜி.ஆர். டிவிக்கு அளித்திருக்கும் நேர்காணலில், ‘’பாதிக்கப்பட்டவரே நியாயம் கேட்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. எடப்பாடியாரை எதிர்த்து ஆக்ரோசமாக கேட்க வேண்டிய சசிகலா அமைதியாகவே இருக்கிறார்.
பிஜேபிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் எடப்பாடியார். அதிமுகவில் பிரச்சனைக்கு காரணமே பிஜேபிதான் என்பது இவருக்கு தெரியாதா என்ன? அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு பாஜக பக்கம் எல்லோரும் போவது ஏன்? டெல்லியா அதிமுகவுக்கு தலைமை?
எப்படியாவது அதிமுகவில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அவரை எதிர்த்து இன்னமும் பேசாமல் இருக்கிறார் சசிகலா. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியின் போதுதான் எடப்பாடியாருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் சசிகலா.
சிறையில் இருந்து வந்த போது சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது. குடும்பம் குடும்பமாஅக் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். எதிர்பார்ப்புடன் வந்தார்கள். தெய்வமே வந்துவிட்டது போல் கண்மூடித்தனாமாக அவரை நம்பி வந்தார்கள். நல்ல முடிவை எடுப்பேன் என்று சொன்னதால்தான் அவருடன் எல்லோரும் பயணித்தோம்.
தமிழ்நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு திரண்டது. ஆனாலும் சசிகலா இன்னமும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதால், என்னாலும் என்னுடன் இருப்பவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை.
எல்லோரையும் வெளியே அனுப்புகிறாயா? இரு, நான் யார் என்று காட்டுகிறேன் என்று செய்யவேண்டியதானே? அதைச் செய்யாமல் பேசிக்கிட்டே இருப்பது எவ்வளவு வேதனையான விசயம்.

பிரிந்தவர்களை சேர்த்துடுவேன்.. சேர்த்துடுவேன்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறார். எப்படி சேர்த்திட முடியும்? அன்னைக்கு இப்படி சொன்னபோது நம்பிக்கை இருந்தது? இன்றைக்கும் அதையே சொல்லும் போது வேதனையாக இருக்குது. ஏன் இப்படி இருக்காங்க? எப்பங்க சரி பண்ணுவாங்கன்னு கேட்குறாங்க? அதுக்கு என்னால பதில் சொல்லவே முடியல. ஏப்ரல் வரைக்கும் கூட நம்பிக்கையா இருந்தேன். ஜூன் மாசத்துக்கு அப்புறம் பாதை மாறி போனதும், அங்கே இருக்குற சுச்சுவேசன் இப்ப சரியா இல்ல. அதனால ஒதுங்கி இருக்குறேன்’’ என்கிறார்.
எடப்பாடியிடம் பண விசயத்தில் லாக் ஆகியிருக்கிறாரா சசிகலா? என்கிற கேள்விக்கு, ‘’இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்கிறார். அதே நேரம், ‘’சசிகலா வரக்கூடாது. வந்துவிட்டால் பழைய நிலைமை திரும்பிவிடுவே என்கிற பயம் எடப்பாடியாருக்கு இருக்குது’’ என்கிறார்.

சசிகலாவை பிஜேபி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா? இதனால்தான் எடப்பாடிக்கு எதிராக செயல்பட முடியாமல் இருக்கிறாரா சசிகலா? என்ற கேள்விக்கு, ‘’இந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது. பிஜேபிதான் எல்லாரையும் இயக்குகிறது. ஒற்றுமை இல்லாதாதால் மந்தையில் மாடுகள் பிரிந்து நின்றதால் சிங்கம் ஈசியாக எல்லோரையும் அடித்துவிட்டது. ஆனால் பிஜேபிக்கு சசிகலா பயப்படவில்லை. ’’ என்கிறார்.