
கடைசியாக ராமதாசின் ஆதரவாளர் அருள் எம்.எல்.ஏவை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ள அன்புமணி, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. நிறுவனருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதாவது பாமக தலைவர் ஆகிய தனக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. நிறுவனர் ஆகிய ராமதாசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, ‘’இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை’’ என்று நழுவினார் ராமதாஸ்.
தைலாபுரத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்த கேள்வி குறித்து மேலும் அளித்த விளக்கத்தில், ‘’பாமகவில் ஒருவரை நீக்கும் அதிகாரமோ, நியமிக்கும் அதிகாரமோ அது என்னிடம்தான் உள்ளது. சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அருள், பாமகவின் கொறடாவாக உள்ளார். அவர் கொறடாவாக தொடர்வார். மேலும் அவருக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பொறுப்புகளை வழங்க இருக்கிறேன்’’என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், ‘’ஒற்றை மனிதன்… 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று பாமக வளர்ச்சிக்கு பாடுபட்டேன். இந்த ஊமை ஜனங்களுக்காக இன்றும் பாடுபட்டு வருகிறேன். என் மனசு வேதனைப் படுகின்ற அளவுக்கு வருகின்றன செய்திகள். அதை ரத்தம் செய்கின்றது’’ என்று அன்புமணி தனக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த வருத்தத்தை பதிவு செய்தார்.
பாமக கூட்டணி குறித்து அய்யா அறிவிக்கும் போது பெண்கள், இளைஞர்கள் துள்ளிக்குதிப்பார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. சொல்லியிருக்கிறாரே? அப்படி துள்ளிக்குதிக்கும் வகையில் எந்த கூட்டணிக்கு போகப்போகிறது பாமக? என்ற கேள்விக்கு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த அருள் எம்.எல்.ஏவை கைகாட்டி, ’’அவரிடமே கேளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார் ராமதாஸ். பின்னர், ‘’அவருக்கு ஏதோ பிடித்த கட்சியை நான் அறிவிப்பேன். அப்போது துள்ளிக்குதிக்கலாம் என்று சொல்லி இருப்பார்’’என்றார் ராமதாஸ்.

உடனே, அவருக்கு பிடித்த கட்சி எது? என்று செய்தியாளர்கள் மடக்க, ’’அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு ராமதாஸ் எஸ்கேப் ஆகப்பார்த்த நேரத்தில், ‘’அய்யா அறிவிக்கும் கட்சிதான் எனக்கு பிடித்த கட்சி ‘’ என்று சொல்ல, ‘’இந்தா.. அவரு சொல்லிட்டார்ல..’’என்று சொல்லிவிட்டு சிரித்த ராமதாஸ், ’’பாமகவின் நிர்வாகக்குழு, செயற்குழு , பொதுக்குழு மூன்று அமைப்புகளும் கூடி முடிவெடுக்கும். கூட்டணி குறித்த கேள்விக்கு அப்போது பதில் கிடைக்கும்’’என்றார்.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே… அது பாமகவா? என்ற கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் ’’பாமக இல்லை’’ என்றார்.
2026இல் யாருடன் பாமக கூட்டணி? என்ற கேள்விக்கு, ’’பாமகவின் நிர்வாகக்குழு, செயற்குழு , பொதுக்குழு ஆகிய மூன்றும் கூடி எந்தக் கட்சியோடு, எந்த அணியோடு சேர்வது என்பது குறித்து முடிவு செய்யும். இந்த மூன்றின் கருத்துக்களை கேட்ட பின்னர்தான் யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இதற்கிடையில் திமுகவுடன் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிமுகவுடன் பேசிக்கிட்டு இருக்காங்க என்று வருவதெல்லாம் வதந்திகள்’’என்றார் தெளிவாக.