திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. தவெக தனித்துதான் போட்டியிடும் என்று சொல்லி வந்த விஜயின் மனநிலை கரூர் சம்பவத்திற்கு பின்பு எப்படி உள்ளது என்பது தெரியவில்லை.
அமித்ஷா விஜயுடன் பேசினார், பாஜக டெல்லி மேலிட பிரமுகர் ஒருவர் விஜயிடம் பேசி வருகிறார், எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கரூர் துயர சம்பவத்திற்குப் பின்னர் தவெக பக்கம் நின்று பேசி வருகின்றனர் அதிமுக, பாஜக கட்சிகள். இந்த சூழலில் பழனிசாமியின் பிரச்சாரக்கூட்டங்களில் தவெக கொடிகள் பறக்கின்றன. இதனால் ஏக குஷியில், வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க என்கிறார் பழனிசாமி.

இது பழனிசாமியின் பகல்கனவு என்கிறார் செல்வப்பெருந்தகை. ’’கூட்டத்தில் தவெக கொடி பறப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி என்று பழனிசாமி பகல்கனவு காண்கிறார். காங்கிரஸ் கூட்டத்தில் கூட தவெக கொடி பறக்கிறது’’ என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியோ, ‘’விஜய் NDA கூட்டணியில் சேர்வதற்கு உண்டான வாய்ப்புகள் மிக குறைவு. சில தொண்டர்கள் தவெக கொடியை பிடித்துக்கொண்டு அதிமுக கூட்டங்களுக்கு வருவதைப் பார்த்து எடப்பாடி தவெக-வுடன் கூட்டணி அமைவது போல பேசுகிறாரா? அல்லது விஜய்யுடன் எடப்பாடி தொலைபேசியில் பேசியதாக சில ஊடக செய்திகள் வந்தன அதை வைத்து இப்படி பேசுகிறாரா? எதுவாக இருந்தாலும் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக இறுதி முடிவு எடுக்கப்படும் முன்பு தொண்டர்கள் மத்தியில் இப்படியொரு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவது தவறு.

இதுபோல தொண்டர்களின் மனஉறுதியை சீர்குலைப்பதும், உறுதிப்படுத்தப்படாத கூட்டணியை நம்பவைத்து கட்சிக்காரர்களின் மனநிலையை சிதைப்பதும் தேர்தல் களத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். இதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
தவெக தரப்பில் இருந்து பதில் வந்தால்தான் உண்மை என்னவென்பது தெரியவரும்.
