
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமித்ஷா அறிவிக்கவேயில்லை. என்.டி.ஏ. வென்றால் அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்றுதான் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
பழனிசாமிதான் முதலமைச்சர் ஆவார் என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? அதை ஏன் அமித்ஷா செய்யவில்லை. அப்படியானால் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி இல்லையா? வேறு யார்? என்று எழும் கேள்விகளுக்கு, எஸ்.பி.வேலுமணி என்று சொல்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.

பாஜக கூட்டணிக்கு பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் வேலுமணியை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்க முயற்சிக்கிறது பாஜக என்ற தகவல் பரவின. அடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்க பாஜக முயல்கின்றன என்று செய்திகள் வந்தன. அதற்கேற்றார் போல் அவரும் அடிக்கடி டெல்லி சென்று வந்தார். ஆனால் திடீரென்று டெல்லி சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டார் பழனிசாமி.
பாஜக கொடுத்த அழுத்தங்கள் தாங்க முடியாமல்தான் வழிக்கு வந்திருக்கிறார் பழனிசாமி என்பதால்தான் அவர் மீது பாஜக தலைமைக்கு நம்பிக்கை இல்லாமலேயே இருக்கிறது. இதனால்தான் பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க பாஜக தலைமைக்கு விரும்பம் இல்லாமல் இருக்கிறது என்கிறார்கள்.

தேர்தல் சுற்றுப்பயணம் செய்து தனது செல்வாக்கை காட்ட பழனிசாமி முயன்று வரும் அதே வேளையில், ‘பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சிதான். நான் தான் முதல்வர். செங்கோட்டையன் தான் அடுத்த பொதுச்செயலாளர்’ என்று கட்சியின் சீனியர்களிடம் சொல்லி வருகிறாராம் வேலுமணி. குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் விசிட்டின் போது ஓ.எஸ்.மணியனிடமும், காமராஜிடமும் சொல்லி இருக்கிறார் என்கிறது டெல்டா அதிமுக வட்டாரம்.
வேலுமணியையும், செங்கோட்டையனையும் வைத்து தன்னை பாஜக தலைமை மிரட்டுகிறது. அதாவது கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தன்னை ஓரங்கட்டிவிட்டு வேலுமணியை முதல்வராகவும், செங்கோட்டையனை அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆக்கவும் பாஜக தயாராக இருப்பதை எல்லாம் அறிந்த பழனிசாமி ஆத்திரப்பட்டு, ‘’எந்த மிரட்டலுக்கும் அதிமுக தொண்டன் பயப்படமாட்டான்’’ என்று ஜெயங்கொண்டம் கூட்டத்தில் கொந்தளித்தார்.

இதைக்கேட்டதும், வடிவேலு காமெடி போல், இவரைத்தான் பாஜக மிரட்டி இருக்குது. அத நேரடியா சொல்லாமல் தொண்டன் என்று சமாளிக்கிறார் என அப்போதே கூட்டத்தினர் முணுமுணுத்தனர்.
வேலுமணி – பழனிசாமி விவகாரத்தில் அதிமுகவில் களேபரம் வெடித்திருக்கிறது. ஆனால் வேலுமணியோ இது எதுவும் தெரியாதது மாதிரி, பழனிசாமியின் சுற்றுப் பயண வேலைகளைச் செய்து வருகிறார். அவர் தான் அப்படி என்றால், பழனிசாமியின் ஈரோடு சுற்றுப்பயண வேலைகளை செங்கோட்டையன் கவனித்து வருகிறார்.
இதை எல்லாம் பார்த்து, ‘’அங்க என்னடா நடக்குது?’’ என்று வடிவேலு பாணியில் கேட்டுக் கொள்கிறார்கள் ர.ர.க்கள்.