
ஈஷா வழக்கு உயர்நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை நிறுத்தி வைப்பதாக கூறி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் இயங்கி வருகிறது ஈஷா யோகா மையம். இந்த யோகா மையத்தில் உள்ள தன் மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சில சந்தேகங்கள் உள்ளன. தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்ற பெண்களை மட்டும் சன்னியாசத்திற்கு தூண்டுகிறார்? என்ற கேள்வியை எழுப்பியது. மேலும், ஈஷா மீது நிலுவையில் உள்ள விசாரித்து வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து கோவை சமூகநலப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழந்தைகள் நல அதிகாரிகள் என்று 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈஷா மையத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர், இந்த மையம் யாரையும் திருமணம் செய்துகொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ வற்புறுத்துவதில்லை. இரண்டு பிரச்சாரிகளின் பெற்றோர் மட்டும் கடந்த 8 வருடங்களாக இந்த மையம் மீது பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். உள்நோக்கத்துடன் இப்படி செயல்பட்டு வருகிறார் என்று விளக்கமளித்த ஈஷா, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஈஷா.
உச்சநீதிமன்ற விசாரணையில், ‘’ஈஷா மீதான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகையானது.தேவையற்றது. ஈஷாவுக்குள் காவல்துறையோ, ராணுவமோ நுழைய அனுமதிக்க முடியாது’’ என்று வாதிட்டார் முகுல் ரோஹத்கி.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நடந்த விசாரணையில், ஈஷா யோகா மையத்தில் இருக்கும் இரண்டு பெண்களும் நீதிபதிகளுடன் வீடியோ காலில் பேசினர். இதையடுத்து, அவ்விரு பெண்களும் அவர்களின் முழு சம்மதத்துடன் இருக்கிறார்கள். இதனால் எந்தவித காரணமும் இல்லாமல் ஈஷா மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவை நிறுத்திவைக்கிறோம், விசாரணைக்கு தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.