கடவுளை வியாபாரப் பொருளாக்குவதும், அந்த வியாபாரத்தைக் கற்றவர்கள் ‘நானே கடவுள்’ என்று தன் நாடி வரும் பக்தர்களை நம்ப வைப்பதும் அடிக்கடி நடப்பதுதான். அதில் ஹை-டெக் வியாபாரம் அறிந்தவர் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ். கோவையில் மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் ஈஷா நிறுவிய ஆதியோகி சிலை திறப்பு விழாவில் நாட்டின் பிரதமரே கலந்துகொண்டதாலும், ஆண்டுதோறும சிவராத்திரியில் மந்திரிகள் பங்கெடுப்பதாலும் ஈஷாவால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த குற்றச்சாட்டுகள் பலனின்றிக் கிடந்தன. தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தாக்கல் செய்த மனுவில் ஈஷா மீதான புகார்களில் உள்ள அடிப்படை முகாந்திரங்கள் வெளிப்பட்டுள்ளன.
பக்தர்களாகவும் தன்னார்வலர்களாவும் ஈஷாவுக்கு வரும் இளம்பெண்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை என பெற்றோர் தெரிவிக்கும் புகார்கள், ஈஷா மையத்தில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்கள், சந்தேகத்திற்கிடமான மர்ம மரணங்கள் குறித்த புகார்கள், வனப்பகுதியில் அமைந்துள்ள மையத்தால் பழங்குடியினர் முதல் பல்வேறு உயிரினங்கள் வரை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த புகார்கள் என அடுக்கடுக்கான புகார்கள் ஈஷா மீது உண்டு. உயர்நீதிமன்றம் இவற்றை விசாரிக்கத் தொடங்கினால் உடனடியாக உச்சநீதிமன்றம் வரை தடை பெறும் வலிமையான கட்டமைப்பும் ஈஷாவுக்கு உண்டு. இதையெல்லாம் கடந்து, ஈஷா மீதான புகார்களை விசாரிக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பாதிக்கப்பட்டுள்ள பல தரப்பினருக்கும் நம்பிக்கையை தந்துள்ளது.
பக்தர்களாக சென்று ஆன்மிக சிறையில் சிக்கி வெளியே வரமுடியாத பெண் பிள்ளைகளை ஈஷாவிலிருந்து மீட்டுத் தரக் கோரி வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், தற்போது வனப்பகுதியில் ஈஷாவின் கரங்கள் வளைத்துப் போட்டிருக்கும் பகுதியால் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்த விவரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மலைவாழ் மக்களின் வாழ்விடங்களை ஒட்டி யோக மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குப் பெறவேண்டிய மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்தப் பகுதிதான் யானை வலசை என சொல்லப்படும், யானைகள் தங்களின் உணவு-தண்ணீர் தேவைக்காகப் பயன்படுத்தும் பாதையாகும்.
பொதுவாக 20 டிகிரி அளவிற்கு சரிவானப் பகுதியாக இருந்தால், அதைத் தவிர்த்து, அருகிலுள்ள சமதளத்தை நோக்கித்தான் யானைகள் செல்லும். அப்படிப்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் யானைகள் ஊருக்குள்ளும் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். காட்டு வளம் பாழ்படுகிறது. ஈஷாவுக்கு இருந்த அதிகார செல்வாக்கினால் இந்த விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் மையத்தை மலையடியவாரக் காட்டுப்பகுதியில் யானைகள் செல்லக்கூடிய பாதையில் அமைத்துவிட்டது. ஈஷாவுக்கு அதிகார மையங்களில் உள்ள செல்வாக்கினால் இது எளிதாக நடந்துவிட்ட நிலையில், அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மதம்-சாதி வேறுபாடில்லாமல் மேலும் பல நிறுவனங்களும் மலையடிவாரத்தையும் வனப்பகுதியையும் யானைப் பாதைகளையும் மறித்து கட்டங்களைக் கட்டியிருக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டப்பட்டிருக்கின்றன.
இதனால் தங்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது என்று விவசாயிகளும் மலைவாழ் மக்களும் எழுப்பிய கோரிக்கைகளும் போராட்டங்களும் ஈஷாவின் சிவராத்திரி டான்ஸ்க்கான பேரிரைச்சல் இசையில் அமுங்கிவிட்டன. வரம்புமீறல்கள் தொடர்ந்த நிலையில், பெற்ற பிள்ளைகளின் நிலையை எண்ணிக் கவலைப்பட்ட பெற்றோர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு மூலமாக நீதியின் வெளிச்சம் ஒரு சிறு துவாரம் வழியே எட்டிப் பார்ப்பது போன்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
காடு வளர்க்கிறோம், காவிரியைக் காக்கிறோம், கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கிறோம், மருத்துவ உதவிகள் செய்கிறோம், ஆன்ம பலம் தருகிறோம் என்று ஈஷா உருட்டியவை அனைத்தும் போலியானவை என்பதும், திரைக்குப் பின்னே உள்ள ரகசியங்கள் அதிர்ச்சிகரமானவை என்பதும் உச்சநீதிமன்ற்ததில் தமிழ்நாடு காவல்துறை தாக்கல் செய்துள்ள மனுவின் சாராம்சத்தின் மூலம் அறிய முடிகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலான பேட்டிகளும் தமிழ்நாடு, கர்நாடகா எனப் பல பகுதிகளிலிருந்தும் வெளியாகின்றன. யோக மையத்தில் மயானம் கட்டப்பட்டிருப்பது, ஈஷாவில் காணாமல் போனவர்கள் பற்றிய சந்தேகத்தை உருவாக்குகிறது.
காடுகள், விலங்குகள், மனிதர்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஈசன் பெயரால் சர்வநாசம் செய்திருக்கிறதோ ஈஷா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நீதியின் தீர்ப்பு அனைத்தையும் தெளிவாக்கட்டும்.