கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல், காசாவில் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஐ.நா அமைப்பின் உயரிய நீதித்துறையான சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை ஜனவரி 11-ம் தேதி தொடங்கி இரு நாட்கள் சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், இடைக்கால தீர்ப்பை இன்று(ஜனவரி 26) வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் அமர்வு கூடியவுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இனப்படுகொலை உடன்படிக்கையின் படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக கூறியது.
சர்வதேச நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் கொண்ட குழுவில் 16 நீதிபதிகள் மட்டும் அமர்வில் இன்று பங்கேற்றனர்.
தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிமன்றம், இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அதிரடியாக தெரிவித்தது.
காசா பகுதியில் இனப்படுகொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இஸ்ரேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனப்படுகொலையை நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், இஸ்ரேல் தனது படைகளை இனப்படுகொலை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டது.
காசா பகுதியில் மனிதாபிமான உதவியை இஸ்ரேல் அனுமதிக்கவும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.
காசாவில் இனப்படுகொலையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு இஸ்ரேல் எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நிலைநிறுத்த இஸ்ரேல் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி இடைக்கால அவசர தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் நிறைவு செய்தது.
தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நீதிமன்றம் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காதது சற்று ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தென் ஆப்பிரிக்கா வரவேற்பு
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியாக பார்ப்பதாக தென் ஆப்பிரிக்கா தீர்ப்பை வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்த தென் ஆப்பிரிக்கா, நீதிமன்றத்தின் உத்தரவுகளை இஸ்ரேல் நிராகரித்து செயல்படாது என்று நம்புவதாகவும் கூறியுள்ளது.
பலஸ்தீனர்களுக்கான நீதிக்கான தேடலில் இந்தத் தீர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாவும் தென் ஆப்பிரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
போர் தொடரும் – நெதன்யாகு
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யல்ல, அது மூர்க்கத்தனமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த விவாதம் தலைமுறைகள் கடந்தும் அழியாத அவமானத்தின் அடையாளமாகும், என கடுமையாக விமர்சித்து நெதன்யாகு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிணைக் கைதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படும் வரை, காசா பகுதி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வரை, ‘முழுமையான வெற்றி’ கிடைக்கும் வரை, இஸ்ரேல் போரைத் தொடரும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.