இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை உலகம் எதிர்பார்க்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இவ்விவகாரத்தில் இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளன.
மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், பெல்ஜியம் ஆதரிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவின் வழக்கு
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று, முதல் நாடாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதித்துறைப் பிரிவான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice), பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா வழக்குத் தொடர்ந்தது.
தென்னாப்பிரிக்காவின் 84-பக்க வழக்கு ஆவணம், இஸ்ரேலிய நடவடிக்கைகளின் வன்முறைகளை விவரித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“பாலஸ்தீனிய தேசிய இனத்தை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழித்து ஒழித்து வருகிறது” எனத் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு ஆவணத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7 துவங்கி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால், இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையானோர் குழந்தைகள் மற்றும் பெண்களாகும்.
இன்றும் இஸ்ரேலின் கொடுமைகள் தொடர்ந்து வரும் சூழலில் பட்டினி பிடியில் சிக்கி பாலஸ்தீன மக்கள் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 11 அன்று துவங்கி இரண்டு நாட்கள் சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது.
தென் ஆப்பிரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுவேலா, மலேசியா, பிரேசில், துருக்கி, ஜோர்டான், மாலதீவுகள், நமீபியா, பாகிஸ்தான், பொலீவியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு குறித்து தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.