சந்திரயான் -3 பயணத்தின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மற்றொரு சந்திர பயணத்திற்கு தயாராகி வருகிறது.
இஸ்ரோவின் அடுத்தக்கட்டத் திட்டமாக சந்திரயான் -4 விண்கலத்தை வருகிற 2028-ம் ஆண்டு ஏவத் திட்டமிட்டுள்ளது.
LUPEX மிஷன் என்று அழைக்கப்படும் இந்த சந்திரயான்-4 விண்கலத் திட்டம், வருகிற 2028-ல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (Space Applications Centre) விஞ்ஞானி டாக்டர். நிலேஷ் தேசாய் தகவல் தெரிவித்துள்ளார்.
மிகவும் சிக்கலான பிரச்சனைகளை முறியடித்த சந்திரயான்-3 திட்டப் பணியின் சாதனைகளைப் பின்பற்றி சந்திரயான்-4 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சந்திரயான்-4 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது உலக நாடாக இந்தியா உருவெடுக்கும்.
நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கி பாறை மாதிரிகளை சேகரித்து, அவை பகுப்பாய்வுக்காக பூமிக்குக் கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பகுபாய்வு மூலம் கிடைக்கும் தரவுகளின் படி, நீர் உள்ளிட்ட நிலவில் உள்ள வளங்கள் பற்றிய தகவல்களை பெற முயற்சிக்கப்பட உள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தை விட அதிகத் திறன் கொண்ட 350 கிலோ எடையுள்ள ரோவரை சந்திரயான்-4 விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளது.
வருகிற 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.