
ராமதாசின் வயதைக் காரணம் காட்டி அவரை கட்சிப் பணிகளில் இருந்து முழுவதுமாக விலகி இருக்குமாறு சொல்லி வருகிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, என் உயிர் மூச்சு இருக்கும் வரையிலும் நானே பாமகவின் தலைவராக இருப்பேன் என்று சொல்லி வருகிறார்.
இதனால் பாமக இரண்டாக உடைந்து நிற்கிறது. ராமதாஸ் எவ்வளவோ அறிவுறுத்தியும் கூட அவர் பக்கம் வந்து நிற்காமல் பிடிவாதமாக எதிர்திசையிலேயே நிற்கிறார் அன்புமணி.
இந்நிலையில் இன்று பாமக செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் தஞ்சை சுப்பிரமணிய ஐயர் பேச எழுந்தார்.
அப்போது ராமதாஸ், ’’சுப்பிரமணிய ஐயர் மிகச்சிறந்த பேச்சாளர். ஆனா, இன்றைக்கு அரை நிமிசத்திலேயே முடிக்கப் போறாரு பாருங்க’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். அவர் அதிக நேரம் பேசிவிடுவார் என்றுதான் ராமதாஸ் அப்படிச்சொன்னார். அதே மாதிரி இடையிடையே சிலர் பேச்சை நிறுத்த முன்வந்தபோதும் கூட, கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு தான் பேசியதை எல்லாம் பேசிவிட்டே சென்றார்.

‘’சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’’ என்று அவர் பாடியபோதும், ‘’100 வயது ஆனாலும் சிங்கம் சிங்கம்தான்’’ என்று சொன்னபோதும் அரங்கம் ஆரவாரம் செய்தது. வயதாகிவிட்டது என்று அன்புமணி சொல்வதற்கு, ‘’சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’’ என்று சொல்லி இருந்தார் ராமதாஸ். அதை இங்கே சுப்பிரமணிய ஐயர் குறிப்பிட்டதால் அரங்கம் ஆரவாரம் செய்தது.
அடுத்து, ’’நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற, நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..என்றும் நல்லவங்க யாரும் உங்க பின்னால.. நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னால. ’’என்று பாடியபோது, அரங்கம் அதிர்ந்தது. அதாவது, ராமதாஸ் அணி, அன்புமணி அணி என்று பாமக இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் நிலையில், ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் சுப்பிரமணிய ஐயர் பாடியது ஆரவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய சுப்பிரமணிய ஐயர், ‘’நீ எவ்வளவு பெரிய பிள்ளையா இருந்தாலும் அப்பா, அம்மாவுக்கு அடக்கம்தான். இன்னாருடைய பிள்ளை என்றுதான் சொல்லுவார்கள். ’அவர்’ யாருடைய பிள்ளை என்று கேட்டால் அய்யாவோட பிள்ளை என்றுதான் சொல்லுவார்கள்.
பெற்றோரின் சாபத்திற்கு பரிகாரமே கிடையாது. தலாய் லாமாவுக்கு 90 வயசு. இன்றைக்கு வரைக்கும் அவர்தான் புத்தமதத்தின் தலைவர். காஞ்சி மடத்திற்கு 101 வயசு வரையிலும் தலைவராக இருந்தார் பெரியவர். 90 வயது வரையிலும் எலிசபெத்துதான் ராணி. 70 வயது வரையிலும் சார்லஸ் இளவரசராகத்தான் இருந்தார். ராணிக்கு பிறகுதான் சார்லஸ் மன்னராக முடிந்தது.
சந்திரபாபு நாயுடு மாமனாரை கவுத்து ஆட்சிக்கு வந்தார். சரத்பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார் ’’நீங்கள் எல்லாம், நீங்கதான் எல்லாம்’’ என்று சரத்பவாரிடம் சொல்லிக்கொண்டே குழி பறித்துவிட்டார்.
அப்பா, அம்மாதான் தெய்வம். அய்யா நாக்கு கரிநாக்கு . சொன்னா பலிச்சுடும். சாபத்தை வாங்கிக்காதீங்க.

உங்களை காப்பாற்ற அய்யாவால்தான் முடியும். வழக்குகளில் இருந்து உங்களை காப்பாற்ற அய்யாவால்தான் முடியும். பிரதமர் மோடியே அய்யா சொல்லுவதைத்தான் கேட்பார். அதனால் உங்களை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் அய்யாவிடம் வருவதுதான் சரி, அது யாரா இருந்தாலும் சரி’’ என்று அன்புமணியின் பெயரைக் குறிப்பிடாமல் அவருக்கு அறிவுறுத்தினார்.
’’அய்யா ஒரு இமயமலை. மோதினால் உன் மண்டை உடைந்துவிடும். கட்சிதான் அய்யா, அய்யாதான் கட்சி. சங்கம்தான் ஐயா, ஐயாதான் சங்கம். மருத்துவர் அய்யாதான் குலதெய்வம்; அவர் சொன்னதைத்தான் செய்வோம்’’என்றவர், ‘’ஒருத்தர் அந்நியன் மாதிரி பேசுகிறார். மருத்தவர்தான் குல தெய்வம் ..மருத்துவர் சொன்னதைத்தான் செய்வோம் என்று சொல்லிக்கொண்டே திடீரென்று ‘கொன்னுடுவோம்’ என்கிறார்’’ என அந்நியன் விக்ரம் போலவே செய்து காட்டினார்.
சுப்பிரமணியன் ஐயர் பேசப்பேச குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தார் ராமதாஸ்.