கொடூரச் செயலை செய்தவர் சுதந்திரமாக நடமாடுகிறார். இது பயங்கரமானது என்று மாஜி கணவர் திலீப்பை விளாசுகிறார் மஞ்சு வாரியர்.
நடிகர் திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியார். காதல் தம்பதிகள் திருமண வாழ்க்கை நல்லவிதமாக சென்ற நேரத்தில் வெளிநாட்டில் நடந்த நட்சத்திர இரவுக்கு திலீப் சென்ற போது அங்கே வந்திருந்த நடிகை காவ்யா மாதவனுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அதை கேரள நடிகை பார்த்து மஞ்சுவாரியாரிடம் சொல்லிவிட்டதாகவும் தகவல். மஞ்சுவாரியரும் அந்த நடிகையும் நெருங்கிய தோழிகள் என்பதால் நேரில் பார்த்ததை தாங்கமுடியாமல் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையின் விரிசல் காரணமாக திலீப்பை பிரிந்தார் மஞ்சுவாரியார். இதற்கெல்லாம் காரணம் அந்த நடிகை தானே என்று, ஆத்திரம் கொண்ட திலீப் அந்த நடிகையை பலி வாங்க திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த 2017ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் சிலர். இதில் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் திலீப் மீதான புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட நடிகையை விடவும் மஞ்சுவாரியாருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அந்த அதிருப்தியை அவர் அறிக்கை மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
’’ நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையடையவில்லை. குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான செயலைத் திட்டமிட்டு செயல்படுத்திய மனம், அது யாராக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடக்க வழிவகுத்தது, அது பயங்கரமானது.

இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படும் போதுதான் நீதி முழுமையடையும். இது ஒரு பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல. இது ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும், தங்கள் பணியிடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி, தைரியமாக, தலை நிமிர்ந்து நடக்கத் தகுதியானவர் என்பதைக் காட்டுகிறது’’ என்று சொல்லும் மஞ்சுவாரியார், பாதிக்கப்பட்ட நடிகையுடன் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பக்கபலமாக இருப்பேன் என்கிறார்.
