இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பக்லியாரா டெய் மார்சி என்ற கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை
இத்தாலியின் (Italy) மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான் பக்லியாரா டெய் மார்சி. இக்கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், இக்கிராமத்தில் குறைந்த அளவே மக்கள் தொகை காணப்படுதல் மற்றும் இளம் தலைமுறையினர் வேலை மற்றும் கல்விக்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததால், கிராமத்தில் பெரும்பாலும் முதியவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மேலும் கிராமத்தில் இளம்வயதினர் இல்லாததால் பள்ளிகள், பூங்காக்கள் மூடப்பட்டது.
இதனால், பக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi) கிராமத்தில் குழந்தைகளின் சத்தம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், பலர் அந்த கிராமத்தின் எதிர்காலம் முடிவடைகிறது என்றும் நாம் தான் கடைசி தலைமுறை என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

இந்நிலையில், இக்கிராமத்தில் பாப்பியா (Bappia) மற்றும் கியுலியா (Giulia) தம்பதியினருக்கு லாரா புஸ்ஸி டிராபுக்கோ என்ற குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அக்கிராம மக்கள், இக்குழந்தையின் பிறப்பை கொண்டாடுகின்றனர். மேலும், லாராவின் பிறப்பு “ஒரு புதிய தொடக்கம்” எனக் கருதும் அப்பகுதி மக்கள், இந்த நிகழ்வு மற்ற இளம் குடும்பங்களையும் மீண்டும் கிராமங்களுக்கு திரும்ப ஊக்குவிக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
மேலும், மறக்கப்பட்டதாக நினைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஒரு சிறிய குழந்தையின் பிறப்பு, மகிழ்ச்சியையும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும் அக்கிராம மக்களிடையே மீண்டும் கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம், சமூக ஊடகங்களில் வெளியாகி உலக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
