போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்பிரிவை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு(NCB) பயன்படுத்தியது செல்லாது என டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாபர் சாதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ள டெல்லி நீதிமன்றம் கூறியதாவது,
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அன்று முஜிபுர் ரஹ்மான், அசோக்குமார், முகேஷ் ஆகியோரிடமிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதே தவிர ஜாபர் சாதிக்கிடமிருந்து எந்த போதைப்பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
ஜாபர் சாதிக்கின் கார் ஓட்டுநர் முரளி கிருஷ்ணன் என்பவரை தற்போது வரை கைது செய்யவில்லை, முரளி கிருஷ்ணன் கடந்த மார்ச் 15-ம் தேதி அன்று ஏடிஎம் மெஷினில் Aventa என்ற நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியதாக சிசிடிவி காட்சிகளைக் கொடுத்துள்ளீர்கள், ஆனால் பிப்ரவரி 15-ம் தேதி அன்றே போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே இந்த சிசிடிவி காட்சிகளுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் 2 மெயில் ஐடிக்கள், 3 மொபைல் எண்கள் மற்றும் ஒரு பிராட்பேண்ட் எண் ஆகியவை ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடையது என தற்போது வரை தொழில்நுட்ப ரீதியாக NCB அமைப்பு நிரூபனம் செய்யவில்லை.
3 மொபைல் எண்ணில் ஒரு மொபைல் எண் ஜாபர் சாதிக்கின் சகோதரர் மைதீன்ஜானி என்பவருக்குச் சொந்தமானது என NCB அமைப்பு கூறியது
ஆனால் அந்த மொபைல் எண் ஜலால் பாட்ஷா என்பவரின் பேரில் உள்ளது தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் ஜாபர் சாதிக்கின் சகோதரையம் ஜலால் பாட்ஷாவையும் இதுவரை NCB அமைப்பு விசாரணை செய்யாதது ஏன்?
NCB அமைப்பு சமர்ப்பித்த Voice Note-களில் ஜாபர் சாதிக்கின் தொடர்புடைய நபர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் முகேஷ் ஆகியோரின் குரல் பதிவுகள் மட்டுமே உள்ளதே தவிர ஜாபர் சாதிக்கின் குரல் இல்லை.
முஜிபுர் ரஹ்மான் மற்றும் முகேஷ் ஆகியோருக்கு ஜாபர் சாதிக் Voice Note-கள் அனுப்பயதியாக கூறப்படும் மொபைல் எண் அகிலேஷ் குமார் என்பவர் பெயரில் உள்ளது. அவரையும் இதுவரை NCB அமைப்பு விசாரணை செய்யாதது ஏன்?
NCB அமைப்பு சமர்ப்பித்த Voice Note-களில் எந்த இடத்திலும் போதைப்பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்தவில்லை.
இந்த போதைப் பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக்கை நேரடியாக தொடர்புபடுத்தும் எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை NCB அமைப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை.
ஜாபர் சாதிக்கின் மொபைல் எண் என NCB அமைப்பு கொடுத்த எண்ணிலிருந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எவருக்கும் அழைப்போ, எந்தவொரு மெசேஜ்களோ, இ-மெயிலோ செல்லவில்லை.
என தெரிவித்து ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுதிர்குமார் சிரோகி உத்தரவித்துள்ளார்.