சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களையும், ரோகித் 103 ரன்களையும் குவித்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 700-ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
இதில் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் என்ற வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள்:
- முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
- ஷேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன் – 700 விக்கெட்டுகள்
- அனில் கும்ப்ளே- 619 விக்கெட்டுகள்
- ஸ்டூவர்ட் பிராட் – 604 விக்கெட்டுகள்