யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 18) நடைபெற்று வரும் நிலையில், 23 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
செனாப் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தோடா, கிஷ்த்வார், ராம்பான் மற்றும் தெற்கு காஷ்மீர் மாவட்டங்களான அனந்த்நாக், புல்வாமா, குல்காம் மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 26 தொகுதிகளிலும், அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் இறுதி கட்டத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பின்னணி
கடந்த 2018 நவம்பர் 21 அன்று ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து, பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது; முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2019 அக்டோபர் 31 அன்று நாடாளுமன்றத்தில் ‘ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு புதிய யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
மே 5, 2022 அன்று, புதிய எல்லைகள், பெயர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைத்து ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம் அறிவித்தது. இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் பகுதியில் முன்பிருந்த 87 சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 90-ஆக அதிகரிக்கப்பட்டது.
- ஜம்மு கோட்டம் – 43 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 6 தொகுதிகள்)
- காஷ்மீர் கோட்டம் – 47 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 1 தொகுதி)
- இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் மொத்தம் – 90 தொகுதிகள்
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் – 24 தொகுதிகள்
- ஜம்மு காஷ்மீரின் மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை – 114
தற்போது 90 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்று வருகிறது; ஆட்சியமைக்க 46 தொகுதிகள் தேவைப்படுகிறது.
‘2014 சட்டப்பேரவைத் தேர்தல்’
ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டங்களாக நடைபெற்ற 2014 சட்டப்பேரவைத் தேர்தலில், முப்தி முகமது சயீத் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (JK-PDP) 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், பரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (JKNC) 15 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும் வென்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 44 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. முப்தி முகமது சயீத் முதலமைச்சரானர்.
2016 ஜனவரி 7 அன்று முப்தி முகமது சயீத் காலமானதை அடுத்து, மெகபூபா முப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் – திடீர் அரசியல் மாற்றம்
கடந்த 2018-ல் முதலமைச்சர் மெகபூபா முப்தி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
நவம்பர் 2018-ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், 20 டிசம்பர் 2018 அன்று மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் 2022-ம் ஆண்டில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
2024 சட்டப்பேரவைத் தேர்தல்
பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி(JKNC) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது; 50 தொகுதிகளில் JKNC கட்சியும், 32 தொகுதிகளில் காங்கிரஸும், பிற கூட்டணி கட்சிகள் 2 தொகுதிகளிலும் போட்டி இடுகின்றன. மீதமுள்ள 6 தொகுதிகளில் JKNC மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் களம் காண்கின்றன.
ரவீந்தர் ரெய்னா தலைமையிலான பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது; 18 இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
மெகபூபா முப்தி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 63 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி 13 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது.
ஜம்மு காஷ்மீரில் பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.