சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார்தானா? என்பதை கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ஜெயக்குமார் தனசிங் மகனிடம் இன்று மாலை டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங்(60). காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த 2.5.2024 அன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்து ஆள் இல்லாததால், மறுநாள் 3ம் தேதி அன்று, ஜெயக்குமாரின் மகன் கருணையா ஜப்ரின்(28) உவரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 4ம் தேதி அன்று கரைச்சுத்து புதூரி உள்ள வீட்டின் பின்புறம் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உடல் சடலமாக மிட்கப்பட்டது.
ஜெயக்குமார் தனசிங் எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்கள் அவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த அறையில் போலீசார் 30 நிமிடங்களுக்கு மேல் சோதனை செய்துள்ளனர். இந்த வழக்கில் திருப்பமாக ஜெயக்குமார் வீட்டில் வேலை செய்து வந்த கணேசனை சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கே அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தபோது, ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி, ’’இது என் கணவர் இல்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்று கதறினார்.
ஜெயக்குமார் தனசிங் வழக்கில் மர்மம் நீடிப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு அது ஜெயக்குமார் தனசிங் உடல்தான் என்று தெரிந்திருந்தாலும், ஜெயந்தியின் சந்தேகத்தை தீர்க்க, ஜெயக்குமார் மகனிடம் டி.என்.ஏ. சோதனை இன்று மாலை நடைபெறுகிறது. ஓரிரு நாளில் இந்த சோதனையின் முடிவுகள் வந்த பின்னர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் மர்மம் விலகும் என்று தெரிகிறது.