எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையினை ஏற்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரை கைது செய்து அதிரடி காட்டி இருக்கிறது தமிழக காவல்துறை.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அன்று, எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைச் சந்தித்து ஒரு முக்கியமான கோரிக்கையினை முன்வைத்தார். ‘’தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஒருதுளி போதைப்பொருள் கூட தமிழ்நாட்டில் விற்பனை ஆகாதவாறு தடுக்க வேண்டும்’’ என்று அந்த சந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
ஆளுநரிடம் வைத்த அந்த கோரிக்கையினை தமிழக காவல்துறையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அது தொடர்பான தீவிர நடவடிக்கையினையும் எடுத்து வருகிறது. அந்த கோரிக்கை குழுவில் இருந்த ஜெயக்குமாரின் உறவினரே இப்போது போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருப்பதுதான் வேடிக்கை.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், கைதான ராகுல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது மாதிரிதான் ஜெயக்குமாரும் ஆளுநரிடம் சென்று அன்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
எடப்பாடி இப்போது தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறாரோ? தன் முதுகில் இத்தனை அழுக்கினை வைத்துக்கொண்டுதான், கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்கச் சென்றிருக்கிறார் ஜெயக்குமார் என்பதுதான் கொடுமை.