கூட்டணி விசயத்தில் என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளது அதிமுக. அதனால்தான் ஆளாளுக்கு ஒன்றை சொல்லி வருகிறார்கள்.
அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் பேசும்போது, திமுகவைத் தவிர மற்ற கட்சியினரை விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார் எடப்பாடி. இதனால் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று கிரீன் சிக்னல் போட்டுவிட்டாரே எடப்பாடி என்று கட்சியினர் கடுப்பானார்கள்.
இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொன்ன எடப்பாடி, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில்தான் உள்ளார் என்கின்றனர் கட்சியினர்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட, பாஜகவையும் பாமகவையும் வரவேற்க கதவை திறந்து வைத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு, இல்லை என்று சொல்லவில்லை எடப்பாடி. ’’மற்ற கட்சியில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், கதவை திறந்து வைப்பது மூடி வைப்பது எல்லாம் அதிமுகவில் இல்லை’’ என்றவர், ‘’தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி? என்பது பற்றி எல்லாம் முடிவாகும். அதற்கு முன் எது சொன்னாலும் அது தேர்தல் வரையிலும் நிற்காது’’ என்றார்.
ஆனால், அதிமுக சீனியர் ஜெயக்குமாரின் கருத்தோ எடப்பாடியின் கருத்துடன் முரண்படுகிறது. ‘’பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை. எப்போதும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.
அதே நேரம், பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்கிறார். ஆதாரமாக, அமைச்சராக இருந்தபோதே உதயநிதி பிரதமரை சந்தித்ததும், திமுக எம்பி திருச்சி சிவா பார்ட்டியில் ஜெ.பி நட்டா கலந்து கொண்டது ஏன்? என்று கேட்கிறார்.
பாஜகவுடன் ஒட்டு உண்டு, உறவும் உண்டு என்பது மாதிரியே எடப்பாடி பேச, அதற்கு நேர்மாறாக ஜெயக்குமார் பேசி இருப்பதால் குழப்பத்தில் உள்ளனர் அதிமுகவினர்.