வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இந்தியாவில் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக டெல்லியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நியூயோர்க் டைம்ஸ் பத்திரக்கையாளர் எமிலி ஷ்மால் அமெரிக்காவில் நடந்த Camden மாநாட்டில் பேசியபோது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை இந்திய அரசின் தேநீர் விருந்துக்கு வருமாறு அழைத்துவிட்டு, இந்திய அமைச்சர் ஒருவர் நேரடியாக தங்களை கடிந்துக் கொண்டதாகவும் எமிலி ஷ்மால் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்திரக்கையாளர் எமிலி ஷ்மால் மேலும் பேசுகையில்,
பத்திரிகையாளர்களை குறிவைக்க இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் பயன்படுத்துகிறது; குறிப்பாக காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் 9 பேர் மீது இந்தியாவின் ஒடுக்குமுறை சட்டமான UAPA விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரத்தின் மீது வெட்கக்கேடான ஒடுக்குமுறைகள் இந்தியாவில் அரங்கேறுகிறது; பத்திரிக்கையாளர்கள் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்திய அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு குறுகிய கால விசா மட்டுமே வழங்கப்படுவதால், இந்தியாவில் அவர்களின் அன்றாட வாழ்க்கை கடினமாக்கப்படுகிறது.
சுமார் 23 ஆண்டுகளாக இந்தியாவில் பணியாற்றிய பிரெஞ்சு பத்திரிக்கையாளர் வனேசா டக்னக் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதே இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு சான்றாகும்.
மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிறகு இந்தியாவில் உள்ள BBC அலுவலகம் விசாரணை அமைப்பால் சூறையாடப்பட்ட நிலையில், தனது ஊடக செயல்பாடுகளையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 2019-ம் ஆண்டு முதல் தகவல் தொடர்புகளை முடக்கிய இந்திய அரசு, காஷ்மீரில் இருந்து பத்திரிகையாளர்கள் சுதந்திரமான செய்தி அறிக்கைகளை வெளியிடுவதையும் தடுக்கிறது.
இந்தியாவில் முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டது வரும் சூழலில், அந்த சமூக பத்திரிகையாளர்கள் முக்கியமாக குறிவைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் பல சிரமங்கள் இருந்தாலும், பத்திரிகைத் துறையில் இளம் பெண் பத்திரிக்கையாளர்களும், தைரியமான நிருபர்களும் வருவதால் இந்திய பத்திரிகைத் துறை துடிப்புடன் உள்ளதாக எமிலி ஷ்மால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.