
இந்தியக் குடிமக்களின் கையில் உள்ள ஒரே அதிகாரம், வாக்குரிமை. அந்த வாக்குரிமையால் ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்களை சுற்றியுள்ள அதிகார வர்க்கமும் அத்துமீறினால் கடைக்கோடி மனிதனின் ஒரே நம்பிக்கை, நீதிமன்றம். சுதந்திரம் பெற்று, குடியரசான இந்தியாவில் அரசியல் சட்டமும், நீதிக்கான சட்டங்களும் இயற்றப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகள் இருந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் மனதில் பதிந்துள்ள சாதிப்படிநிலை உணர்வு முழுமையாக மாறவில்லை என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறைவேறும் நிகழ்வுகள் அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடந்த ஒரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரை நோக்கி, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தெரிவித்த கருத்துகளும், தன்னைப் பற்றி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருக்கும் அந்த வழக்கறிஞர் மீது நீதிபதி எழுப்பிய கேள்விகளும், இது கோர்ட் அவமதிப்புக்குட்பட்டது என்று கூறி, அதையும் தானே விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையையும் நடத்தி, வழக்கறிஞரை கோழை என்று வர்ணித்ததும், அதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் நீதியரசர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மீதான எரிச்சலை நீதிபதி வெளிப்படுத்தியதும் அண்மைக்காலத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நீதிமன்றங்கள் சந்திக்கின்ற விசித்திர நிகழ்வுகளாகும்.
நீதிபதி விசாரிக்கும் வழக்குகளையும், அதன் மீதான தீர்ப்புகளையும் சாதிய மனநிலையில் வெளிப்படுத்துகிறார் என்பது வழக்கறிஞரின் குற்றச்சாட்டு. தன்னைப் பற்றி சாதிய மனோபாவத்துடன் செயல்படுவதாகச் சொன்ன வழக்கறிஞர் முன்னிலையில், சக வழக்கறிஞர்கள் நிறைந்திருந்த நீதிமன்றத்தில், ஒரு யூ-டியூப் வீடியோவை போட்டுக்காட்டி, இதில் தன்னைப் பற்றி அந்த வழக்கறிஞர் சொன்னது என்ன என்பதையும், அதற்கு இடப்பட்டுள்ள தலைப்பை படிக்கும்படியும் நீதிபதி கேட்பது, விசாரணைக் காணொளி வாயிலாக சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
சட்டத்தின் அடிப்படையில், இப்படிப்பட்ட வீடியோ பதிவுகளை மட்டுமே வைத்து குற்றம்சாட்ட முடியாது என்பதால், எழுத்துப்பூர்வமாகத் தருமாறு அந்த வழக்கறிஞர் கோரியிருக்கிறார். “இதற்கு பதில் சொல்லுங்கள்” என்கிற வகையில் நீதிபதி அந்த வழக்கறிஞரை வலியுறுத்துகிறார். நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து சட்டத்தை முழுமையா அறியாதவர்கள் விவாதிப்பதோ, விமர்சிப்பதோ சரியாக இருக்காது. எனினும், அந்த நீதிபதி ஒரு பொது மேடையில், வேதத்தின் பெருமையை சொல்லி, சக நீதிபதிகள் சாதிக் கண்ணாட்டத்தில் செயல்படுவதாகத் தெரிவித்து, சாதிப்படிநிலையில் உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவரின் தண்டனையைக் குறைத்ததை பெருமிதம் பொங்கத் தெரிவித்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
கார் விபத்து ஒன்றை ஏற்படுத்திய பெண்மணி அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால், அவருடைய சகோதரர் அந்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை எதிர்கொண்டு தண்டனை பெற்றார் என்பதும், அவர் மேல்ஜாதிக்காரர் என்பதாலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும், பின்னர் மற்றொரு நீதிபதி மூலம் அந்த தண்டனை குறைக்கப்பட்டதாகவும் சொல்லி, வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும் என்று அந்த நிகழ்வில் பேசியிருக்கிறார் நீதிபதி.
வேதம் படிக்கும் வாய்ப்பை பிறப்பிலேயே பெற்ற சாதியினர், கார் விபத்தில் உயிரைப் பறித்தாலும் அவர்களுக்குப் பதிலாக உறவினரான மாற்று நபரை முன்னிறுத்துவதை ஜஸ்ட் லைக் தட் கடந்து போக வேண்டும் என்பது போலத்தான், நீதியளிக்க வேண்டியவரின் பேச்சு அமைந்துள்ளது. ஆள் மாறாட்டம் என்பதே மிகப் பெரிய குற்றம். அதன்பிறகு வழங்கப்பட்ட மாதக்கணக்கிலான தண்டனை என்பதும் சட்டத்திற்குட்பட்டதே.
இதற்கு சாதியைக் காரணம் காட்டி நீதிபதி பேசிய வீடியோவை போட்டுக் காட்டி, வழக்கறிஞரால் கேள்வி கேட்க முடியாது. நீதி பரிபாலனத்திற்கு உயர்ந்த இடத்தை அளித்து உருவாக்கப்பட்ட சட்டத்தில் உள்ள மாண்புகளை மதித்து நடக்க வேண்டியது, நீதியை வழங்க வேண்டியவர்களின் கடமை. தங்களுக்கு சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பை, பிறப்பின் அடிப்படையில் கிடைத்த பெருமையெனக் கருதி, மற்றவர்களை நோக்கி அம்புகளை எய்வது நீதியாகாது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களின் கண்டனங்களும், தமிழ்நாட்டில் பரவலாக நடந்த வழக்கறிஞர்களின் போராட்டங்களும், அந்த வழக்கறிஞர் மீதான வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு இடமாற்றம் செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, வகுப்புவாரி இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், 69% இடஒதுக்கீடு உள்ளிட்ட பலவும் நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தியே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு, பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வான உரிமைகள் உள்ளிட்டவற்றுக்கு அத்தகைய சட்டப்போராட்டங்கள் தேவைப்படாமலேயே எளிதில் நிறைவேற்றப்படுகின்றன.
சனாதன மனுநீதிக்கும் அரசியல் சட்ட நீதிக்குமான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருப்பதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் நீதிபதி-வழக்கறிஞர் விவகாரம்.