
#கலைஞர்100
-கோவி.லெனின்
“என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?”
“ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை” -பண்ணையாருக்கும் தொழிலாளிக்கும் இடையிலான ‘நாம்’ பட வசனம் இது. தொழிலாளி குறிப்பிடும் அரிவாள் என்பது ஆயுதம் அல்ல. கம்யூனிச இயக்கத்தின் சின்னம்.

‘பராசக்தி’ படத்தில், பணத்தையெல்லாம் இழந்த கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரோட்டோரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் வந்து, தட்டி எழுப்புவார்.
“டேய்.. நீ பிக்பாக்கெட்டா?”
“இல்லை.. எம்ப்ட்டி (empty) பாக்கெட்”
“ஏண்டா.. முழிக்கிறே?”
“தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?” – இதுபோல அந்தப் படம் முழுவதும் நிறைந்திருந்தன ‘பளிச்’ வசனங்கள். அதுபோன்ற வசனங்களைத்தான் இன்று ‘பஞ்ச் டயலாக்’ என்று சவுண்ட் எஃபெக்ட் கொடுத்து முறுக்கேற்றுகிறார்கள். ‘பராசக்தி’யைப் படைத்த கலைஞரோ சர்வசாதாரணமாக இத்தகைய வசனங்களை அள்ளித் தெளித்திருப்பார்.
ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவாஜி மீது அந்த வீட்டுக்காரர் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுவார். அதற்கு சிவாஜி, “அப்படியே சோப்பு இருந்தா கொடுங்க. குளிச்சி நாலு நாளாச்சி’‘ என்பார். நகைச்சுவை கலந்த உடனடி பதிலடியை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இன்றுவரை கடைப்பிடிப்பவர் கலைஞர் மு கருணாநிதி. தமிழின் அழகை, வீச்சை, ஆளுமையைத் திரை உரையாடல்களால் வெளிப்படுத்தியவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது.

“ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”. “என் செயலை சுயநலம் என்பீர்கள். ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது’‘ – என, பாமரர்கள் ரசிக்கும் சினிமாவில் இலக்கிய நயத்துடன் வசனம் எழுதி, படம் பார்க்கிறவர்களும் அதைத் திரும்பத் திரும்பப் பேசி ரசிக்கும் வகையில் தன் தனித் தமிழ் நடையால் வெற்றி பெற்றவர் கலைஞர்.
திராவிடர் இயக்கத்துத் தொண்டனாக, 1938ஆம் ஆண்டு தன் 14ஆம் வயதில் திருவாரூர் வீதிகளில் தமிழ்க் கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து முழங்கிய கலைஞர், போராட்டப் பாடல்களை அவரே எழுதினார். மாணவர்நேசன், முரசொலி எனத் தன்னுடைய எழுத்தாற்றலுக்கான கையெழுத்து-துண்டுப் பிரசுர பத்திரிகைக்களங்களை அவரே உருவாக்கிக்கொண்டார். பெரியார், அண்ணா ஆகியோரின் அறிமுகமும் சிறுவயதிலேயே அவருக்குக் கிடைத்தது. தந்தை பெரியாரின் ‘குடியரசு’ ஏட்டில் உதவி ஆசிரியராக வேலைபார்த்து, ‘கவிதையல்ல’ என்ற வசனகவிதை நூலை வெளியிட்டார். பிறகு, அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று, இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

புராணப் படங்கள் மிகுந்திருந்த அன்றைய சூழலில், மகாபாரதத்தில் வரும் ‘அபிமன்யு’ கதாபாத்திரத்தை வைத்து அதேபெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு வசனம் எழுதினார் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர். படம் வெளியானதும் தன் மனைவியுடன் திரையரங்கத்திற்குச் சென்று படத்தைப் பார்த்தார். அவர் பெயரே படத்தில் இடம்பெறவில்லை. ‘அபிமன்யு’ என்கிற புராண படத்தில் மிக லாவகமாக அன்றைய அரசியல் சூழலை வைத்து வசனங்களை எழுதியிருப்பார் கலைஞர்.
பீஷ்மரையும் துரோணரையும் பார்த்து நியாயம் கேட்கும் இடங்களில், “ஆச்சாரியாரே. ஆச்சாரியாரே..” என்றே வசனங்கள் வரும். காரணம், படத்தில்தான் அவை பீஷ்மாச்சாரியாரையும் துரோணாச்சாரியாரையும் நோக்கிய வசனங்கள். அதன் உள்ளர்த்தத்தில் திராவிட இயக்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சிகளை செய்த ராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) நோக்கி வீசப்பட்ட வசனங்கள். ஆச்சாரியார் என்பது அன்றைய அரசியலில் ராஜாஜியைத்தான் குறிக்கும். அந்தப் படத்தில் அபிமன்யுவின் அப்பாவான அர்ஜூனன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்த ‘ராஜகுமாரி’ (1947) படத்தில்தான் கலைஞரின் பெயர் உரிய அங்கீகாரத்துடன் இடம்பெற்றது. இப்படம்தான் எம்.ஜி.ஆர். முதன்முதலாக கதாநாயகனாக நடித்த படமாகும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் ஒரு பகுதியை நாடகமாக்கியிருந்தார் கலைஞர். அதை திருச்சி வானொலி நிலையம் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டது. அந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடிவு செய்தார் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். உருவானது, ‘மந்திரிகுமாரி’(1950).
ஆட்சியாளர்களை மதவாதிகள் எப்படி ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதுதான் கதை. கலைஞரின் வசனத்தில் எம்.ஜி.ஆர். ‘வீரமோகன்’ என்ற தளபதி பாத்திரத்தில் நடித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார். இந்தப் படத்திலும் கலைஞரின் வசனங்கள் வரவேற்பைப் பெற்றன. “அரண்மனை நாயே.. அடக்கடா வாயை…” என்பது மந்திரிகுமாரியின் வசனத் தெறிப்புகளில் ஒன்று.
நாட்டு நடப்பை புராண-இதிகாச-காப்பியங்கள் அடிப்படையிலான திரைப்படங்களிலும் திறமையாக வெளிப்படுத்தும் கலைஞரின் ஆற்றல் இதிலும் வெளிப்பட்டது. கொள்ளைக்கூட்டத் தலைவன் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், குகையில் உள்ள அவனுடைய கூட்டத்துக்குத் தற்காலிகத் தலைவனாக ஒருவன் உருவாகிவிடுவான். மற்றவர்கள் அவனை எதிர்த்ததும், எதிர்ப்பவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பதவி கொடுத்து சரிகட்டுவான். “நீ நிதி மந்திரி.. நீ உணவு மந்திரி..’ எனப் பதவிகள் வழங்கப்படும்.

அப்போது ஒருவன், “எனக்கு எதுவும் கிடையாதா? நீங்க போன்னா போறதுக்கும் வான்னா வரதுக்கும் நான்தான் ஆளா?” எனக் கோபப்படுவான். உடனே அந்த தற்காலிகத் தலைவன், “போன்னா போறே.. வான்னா வர்றே.. நீதான்டா போக்குவரத்து மந்திரி” என்பான். அந்த நேரத்தில், கொள்ளைக்கூட்டத் தலைவன் திரும்பி வந்துவிடுவான். குகையில் இருந்தவர்கள் தற்காலிகப் பதவிகளை மறந்து, வழக்கம்போல கொள்ளைக்கூட்டத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அப்போது ஒருவன் மெல்லிய குரலில், “என்னடா மந்திரி பதவி வந்ததும் தெரியலை.. போனதும் தெரியலை…” என்பான். திரையரங்கம் சிரிப்பால் அதிரும். இன்றைய நிலையிலும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வசனம் இது.
1951ல் கலைவாணர் தயாரித்த ‘மணமகள்’ படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினார். அதற்காக கலைஞருக்கு ஒரு கார் வழங்கினார் கலைவாணர். தன் எழுத்தாற்றலால் 27வது வயதிலேயே கார் வாங்கியவர் கலைஞர். (மஞ்சள் பையுடன் ரயிலேறி வந்தவர் என விமர்சிப்பவர்கள் கவனத்திற்கு..). மருதநாட்டு இளவரசி, தேவகி போன்ற படங்களுக்கும் தொடர்ந்து வசனம் எழுதிய கலைஞரின் வசனத்தில் 1952ஆம் ஆண்டு வெளியானது தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்ட ‘பராசக்தி’.
அபிமன்யு படத்தில் கலைஞரின் பெயரே இடம்பெறவில்லை. ஆனால் பராசக்தி என்ற பெயர் போடப்பட்டதும் அடுத்ததாக திரைக்கதை-வசனம் மு.கருணாநிதி என்றுதான் வரும். அதன்பின்தான் நாயகன், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களெல்லாம் இடம்பெறும். கலைஞர் வசனமெழுதிய படங்களில் தொடர்ச்சியாக இது கடைப்பிடிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமாகி, கலைஞரின் வசனங்களை சிறப்பாகப் பேசி நடித்தார். நேஷனல் பிக்சர்ஸ்-ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் பகுத்தறிவு விதையை ஊன்றியது.

நாம், திரும்பிப்பார், ராஜாராணி என கலைஞரின் எழுத்தாற்றலில் தொடர்ச்சியாக வெளியான படங்களும் வசனங்களால் வரவேற்பைப் பெற்றன. ‘மனோகரா’ படம் அதில் ஒரு மைல்கல். ‘பொறுத்தது போதும்…பொங்கியெழு’ என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்” என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அதுவரை சினிமா பாடல்கள்தான் பெருமளவில் கிராமபோன் இசைத்தட்டுகளாக வெளிவந்தன. கலைஞரின் திரையுலகப் பிரவேசத்திற்குப்பிறகு பராசக்தி, மனோகரா போன்ற படங்களின் வசனங்கள் ஒலித்தட்டுகளாக வெளியாகி பல இடங்களிலும் ஒலிபரப்பாயின. பாட்டுப்புத்தகங்கள் போல கதை-வசனப் புத்தகங்களும் வெளியாகி அமோகமாக விற்பனையாயின.
சாதாரண மக்களும்கூட கலைஞரின் வசனங்களைப் பேசியதுடன், திரையுலகில் வாய்ப்புத் தேடும் நடிகர்களுக்கு கலைஞரின் வசனங்களே பாடங்களாக அமைந்தன. இன்றைய சூப்பர் ஸ்டார்கள் வரை அந்த வசனங்களை மனப்பாடமாகச் சொல்லி வாய்ப்புகளைப் பெற்ற நடிகர்கள் பலர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டபோது கலைஞர்தான் வசனகர்த்தா. அதில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தார். பெரும்வெற்றி பெற்ற அந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிறப்பான வசனங்களை எழுதியிருந்தார் கலைஞர். சிவாஜி நடித்த ரங்கோன்ராதா, இல்லறஜோதி, இருவர் உள்ளம், புதையல் போன்றவையும் கலைஞரின் வசனங்களில் வந்தவை. எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன் உள்ளிட்டவையும் கலைஞரின் வசனங்களில் அமைந்தவை. சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ‘பூம்புகார்’ ஒரு திரை இலக்கியம்.

நூறாண்டு காணும் இந்திய சினிமாவில் கலைஞரின் பங்கு 70 ஆண்டுகளுக்கு மேலானது. முதல்வராக இருந்த காலகட்டத்திலும் அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1980களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘நீதிக்குத் தண்டனை’, ‘பாசப்பறவைகள்’ போன்ற பெருவெற்றிப் படங்களைத் தந்தார். 2011ஆம் ஆண்டில் தன் 88வது வயதில்கூட ‘பொன்னர்-சங்கர்’ என்ற வரலாற்றுப் படத்திற்கு அவர் திரைக்கதை-வசனம் எழுதினார். கதை, திரைக்கதை, வசனம் என 75 படங்களில் அவரது பங்களிப்பு உள்ளது. மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலைஎழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரடக் ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் 29 படங்களைக் கலைஞர் தயாரித்துள்ளார்.
மந்திரிகுமாரி தொடங்கி 21 படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார். பராசக்தி (பூமாலை நீயே.. புழுதி மண்மேலே…), பூம்புகார் (வாழ்ககையெனும் ஓடம்..), மறக்கமுடியுமா?(காகித .ஓடம்.. கடல் அலை மீது) போன்ற பாடல்கள் இன்றும் நெஞ்சில் ரீங்காரமிடுபவை.

திராவிட இயக்கக் கொள்கைகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் திரைப்படம் மூலமாக வலிமையாகப் பிரச்சாரம் செய்தவர் கலைஞர். கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதில்கூட அவரது கவனமான பார்வையைக் காணலாம். பராசக்தியில் கல்யாணியின் குழந்தை பெயர் பன்னீர்செல்வம் (திராவிடர் இயக்கத் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவாக). பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயர் சபாரத்தினம் (ஈழப்போராளி சீறிசபாரத்தினம் நினைவாக), காவலுக்குக் கெட்டிக்காரன் படத்தில் கதாநாயகனின் பெயர் திலீபன் ( உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த விடுதலைப்புலி திலீபனின் நினைவாக).
கதாபாத்திரங்களின் பெயரிலிருந்து அவை பேசும் வசனங்கள் வரை அனைத்திலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் கலைஞர். அதனால்தான், “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது” என்ற வசனமும், “அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வியும் 65 ஆண்டுகள் கடந்தபிறகும் உயிரோட்டத்துடன் உள்ளது.
தமிழ் எனும் செம்மொழியை திரை ஊடகமாகக் கையாண்டு இயக்கத்தின் கொள்கைகளை, படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை கொண்டு சென்று அவர்களின் நெஞ்சில் நிறுத்திய ஆற்றல் முத்தமிழறிஞர் கலைஞருக்கே உரியது.