
ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சி செய்து வந்துள்ளார் காளியம்மாள். கடைசியில் எங்கும் இடம் கிடைத்துள்ளது என்பது அநேகமாக மார்ச் -1இல் தெரிந்துவிடும் என்றே தெரிகிறது.
நாகை தொகுதியில் குறிப்பாக மீனவ சமூகத்தினரிடையே தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறார் நாதகவில் நிர்வாகியாக இருந்த காளியம்மாள். இது கட்சியின் தலைமை சீமானுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது.
தன் தொகுதியில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டால் தானே தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்பது காளியம்மாள் தரப்பு வாதம். தனி செல்வாக்கை வளர்த்துக்கொண்டு கட்சிக்கு பாதகம் செய்துவிடுவாரோ என்பது நாதக தலைமை வாதம். இந்த உட்கட்சி பிரச்சனையில்தான் ’பிசிறு’ என்று காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ லீக் ஆனது. அதிலிருந்தே காளியம்மாள் நாதகவில் இருந்து வெளியேறுகிறார் என்ற செய்திகள் பரவி வந்தன.
ஏற்கனவே நாதகவில் இருந்து விலகும் முடிவில் இருந்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆடியோவுக்கு பிறகு நாதகவில் இருந்து வெளியேற தீவிர முயற்சிகள் எடுத்து வந்துள்ளார் காளியம்மாள்.

கட்சி தலைமை தன்னை வெளியேற்றும் என்று நினைத்து காத்திருந்தார் காளியம்மாள். சீமானோ, காளியம்மாளே வெளியேறட்டும் என்று காத்திருந்தார். வேறு வழியின்றி தாமாகவே வெளியேறிவிடலாம் என்று நினைத்து திமுக, தவெக கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.
விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் 5 பேரில் ஒருவரான ஸ்ரீநாத் மூலம் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைவது குறித்துப் பேசி இருக்கிறார் காளியம்மாள். இது தெரிந்து திமுக தரப்பும் காளியம்மாளிடம் பேசி இருக்கிறது.
விஜய் – காளியம்மாள் சந்திப்பில் நடந்த பேச்சு வார்த்தையின் போதுதான் அவர் தவெகவில் இணைகிறார் என்று செய்திகள் பரவின. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் காளியம்மாளுக்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், திமுக நாகை பொறுப்பு அமைச்சர், காளியம்மாளிடம் பேசி இருக்கிறார். அப்போது எம்.பி. சீட், அல்லது எம்.எல்.ஏ. சீட் இரண்டில் ஒன்று என்ற நிபந்தனையை வைத்திருக்கிறார் காளியம்மாள். இரண்டுமே நாகை தொகுதியை குறிப்பிட்டு கேட்டிருக்கிறார். இதையடுத்து திமுக தரப்பில் இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது என்கிறார்கள். இந்த ஆலோசனைகளுக்கு பின்னர் திமுக தலைவர் பிறந்த தினமான வரும் மார்ச் 1இல் காளியம்மாள் திமுகவில் இணைகிறார் என்று தகவல் பரவுகிறது.
ஆனால், நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் தனது அறிக்கையில், ’’என்றும் தமிழ்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்’’ என்று கூறி இருப்பதால், திராவிடமும் தமிழ்தேசியமும் இரண்டு கண்கள் என்று சொல்லி இருக்கும் தவெகவில் இணையும் முடிவில் உள்ளாரா? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.
crvatj
heaf6o