’மசிறு’, ‘பிசிறு’ என்று காளியம்மாளை சீமான் திட்டிய ஆடியோ வெளியானதில் இருந்து நாதக மீது அதிருப்தியில் இருந்த வந்த காளியம்மாள், கடந்த சில வாரங்களாக கட்சி செயல்பாடுகளில்ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
காளியம்மாளின் இந்த மவுனம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளார் என்று செய்தி பரவியது.
காளியம்மாள் முன்னதாகவே விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார் என்றும், இந்த செய்தி சீமானுக்கு தெரியவர, அவர் காளியம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு வறுத்தெடுத்தார் என்றும் பனையூர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த காளியம்மாள், ஒரு கட்சியில் இணைய வந்தால், அது குறித்த ரகசியத்தை கசியாமல் பார்த்துக்கொள்ள கூட முடியவில்லையா? என்று கேட்டு, விரக்தியடைந்த மனநிலையில் அவர் அதிமுகவில் சேரும் முடிவில் இருந்தார் என்றும்,
புஸ்ஸி ஆனந்தால் அதிருப்தியில் இருக்கும் தவெக நிர்வாகிகளில் ஒருவரின் கடிதம் மூலமாக இதை தெரிந்து கொண்ட விஜய், ’அவரை அங்கே போக வேண்டாம் என்று சொல்லுங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று நம்பிக்கை அளிக்கும்படி சொல்லி இருந்தார் என்றும், இதனால் காளியம்மாளும் நம்பிக்கையுடன் இருந்து வந்த நிலையில் காளியம்மாள் இன்று தவெகவில் இணைய உள்ளார் என்று காலையில் இருந்தே தகவல் பரவியது.
ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் என்று அடுத்தடுத்து பனையூர் தவெக அலுவலகம் வருகை தந்தபோது அடுத்து காளியம்மாளும் வருகை தர உள்ளார் என்ற பரபரப்பு எழுந்த நிலையில், தவெகவில் தான் இணையப்போவதாக வந்த செய்திகளை காளியம்மாள் மறுத்துள்ளார்.
சீமான் போட்ட முட்டுக்கட்டையால் காளியம்மாள் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்றும், தவெக வட்டாரத்தில் இருந்து தகவல் கசியாமல் இருந்தால் ரகசியமாக வந்து தவெகவில் இணைந்திருப்பார். தகவல் கசிந்ததால் தவெகவில் காளியம்மாளின் இணைப்பு தள்ளிப்போயிருக்கிறது என்கிறது பனையூர் வட்டாரம்.