பிரபாகரனுக்கும் தனக்குமான உறவு குறித்து பல காலமாக சீமான் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை ஒரு நொடியில் போட்டு உடைத்து, சீமானின் அடி மடியிலேயே கை வைத்துவிட்டார் காளியம்மாள்.
பிரபாகரன் படத்தையும் அவரது கொள்கைகளையும் முன்வைத்துதான் இயங்கி வருகிறது நாம் தமிழர் கட்சியின் . ‘’என் தலைவன்’’ என்றும், ‘’தலைவர் பிரபாகரன்’’ என்றும், ‘’அண்ணன் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள்’’ என்று மேடைதோறும் முழங்கி வருகிறார் சீமான்.
பிரபாகரனை தான் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதாகவும், அந்த சமயத்தில் பிரபாகரன் தனக்கு ஆமைக்கறி கொடுத்து சாப்பிட வைத்ததாகவும், ஏகே 64 ரக துப்பாக்கியில் புலிகளிடம் பயிற்சி அளிக்கப்பட்டது என பலப்பல செய்திகளை சொல்லி வருகிறார் சீமான்.
ஆனால், சீமான் இதை எல்லாம் வைகோவும், திருமாவளவனும் மறுத்தனர்.
’’சீமானுக்கு 8 நிமிடங்கள்தான் கொடுத்தார் பிரபாகரன். அதிலும் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று புகைப்படங்கள் இருப்பது எல்லாம் ஒட்டுவேலை. பிரபாகரன் எனக்கு மட்டும்தான் துப்பாக்கி பயிற்சிகள் எல்லாம் அளித்தார்’’ என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
‘’விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு ஆவணப்பட பயிற்சி அளிப்பதற்காக நாங்கள் போயிருந்தோம். அப்போது பாரதிராஜா, மகேந்திரன், சீமான் எல்லாம் பிரபாகரனை சந்தித்தது 10 நிமிடங்கள்தான். அதை வைத்துதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண்.
பத்து நிமிடங்கள்தான் பிரபாகரனுடன் சீமான் பேசினார் என்று பலர் சொன்னாலும், பிரபாகரனுடன் பல மணி நேரம் சந்தித்தித்து பேசியதாகவே சொல்லி வருகிறார் சீமான். பிரபாகரன் புகைப்படங்களை தாங்கி நிற்பதாலும், பிரபாகரன் குறித்து சீமான் பேசி வருவதாலும், பிரபாகரனின் தீவிர ஆதரவாளர் என்று சீமான் சொல்லி வருவதாலும்தான் நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் பலரும் சேர்ந்தனர்.
இந்நிலையில், சீமான் முன்பாக மேடையில் பேசிய நாதக நிர்வாகி காளியம்மாள், ‘’இலங்கைக்கு சீமான் படம் எடுக்கத்தான் சென்றிருந்தார். வெறும் படம் மட்டுமே எடுக்க போயிருந்தால் தலைவர் பிரபாகரன் தமிழ்தேசிய தலைவராக நமக்குள் புகுத்தப்பட்டிருக்க மாட்டார். இலங்கை சென்று சீமான் பேசிய அந்த 10 நிமிட பேச்சுதான் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. அதுதான் அவரின் அரசியலை நிலைபெறச் செய்யக்கூடிய மையப்புள்ளியாக இருந்திருக்கிறது’’என்றார்.
பிரபாகரனை பல நாள் சந்தித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தது போல் சீமான் பேசிக்கொண்டிருக்க வெறும் 10 நிமிடம்தான் என்று காளியம்மாள் சொன்னதும் நாம் தமிழர் கட்சியினருக்கு ஒரே அதிர்ச்சி. அடுத்து பேசிய சீமான் இதை மறுத்தார். ‘’இலங்கைக்கு படம் எடுப்பதற்காக சென்ற குழுவிடனருடன் நானும் சென்றேன். அந்த படத்திற்கான் விழாவை தொடங்கி வைப்பதற்காக சென்றேன். என் தங்கை நான் 10 நிமிடம்தான் பேசியதாக சொல்கிறார். என்ன நடந்தது என்பது எனக்கும் தலைவருக்கும்தான் தெரியும். பல போராளிகளுக்கும் தெரியும். அவர்களால் இப்போது சொல்ல முடியாத நிலை. அவர்களால் சொல்ல முடியாததால் ஆளாளுக்கு ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 10 நிமிடம் பேசியவனிடம் தான் உன்னை நம்பி விட்டு செல்கிறேன் என்று கூறியிருப்பாரா பிரபாகரன். எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் சொல்ல முடியாத நிலை இருக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்தார் சீமான்.
காளியம்மாளை ‘பிசிறு’ என்று சீமான் பேசியதாக ஆடியோ வெளியான பின்னர் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் தலைமையின் ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று காளியம்மாளை திட்டுவதாகவும் ஒரு ஆடியோ வெளியானது.
தன்னை பிசிறு என்று சொன்ன சீமானை பழிக்கு பழி வாங்குவதற்குத்தான் இந்த 10 நிமிட உண்மையை சீமானை வைத்துக்கொண்டே சொன்னார் காளியம்மாள் என்கிறது நாதக வட்டாரம்.