கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது இந்த சம்பவம்.
விஷச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் கள்ளக்குறிச்சிக்கு சென்று விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்து வந்தார்.
இதையடுத்து கடந்த 22ம் தேதி அன்று தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாவேண்டாம். அந்த கொண்டாட்டத்திற்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று அங்கு விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அ த்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவுங்கள் என்று உத்தரவிட்டார்.
விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பின்னரும், ரசிகர்கள் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை. பேனர் வைத்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடித்தீர்த்தனர்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் சாகசத்தின் போது ஒரு சிறுவனுக்கு கை மற்றும் உடலில் தீ பரவிய அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே பேனர் வைத்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடினர்.
சின்னசேலத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பரபரப்பான சாலையோரம் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றில் சாந்ந்து விழுந்தபோது, அந்த வழியாக சாலையில் சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்தது. இதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டான். அக்கம்பக்கத்தினர் இதைப்பார்த்துவிட்டு ஓடிப்போய் அந்த சிறுவனை காப்பாற்றி இருக்கிறார்கள்.
அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி, அந்த பதை பதைப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய், ‘’கள்ளக்குறிச்சி சம்பவத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று சொல்லியும் அந்த கள்ளக்குறிச்சியிலேயே இப்படியா சம்பவம் செய்வார்கள்? கட்சியினர் இப்போதே நாம் சொல்வதை கேட்கவில்லை என்றால் எப்படி? இதையெல்லாம் ஆரம்பத்திலேயே சரி செய்யவேண்டும்’’ என்று தவெக பொதுச்செயலாலர் புஸ்லி ஆனந்த்தை போட்டு வறுத்தெடுத்திருக்கிறார்.