தேர்தல் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை எல்லாம் அமுக்கிவிட்டதாக தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க டெல்லி பாஜக குழு ஒன்று தமிழகம் வந்து விசாரித்து, எந்தெந்த வேட்பாளர் எவ்வளவு பணத்தை அமுக்கினார் என்று புள்ளிவிபரத்துடன் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். இந்த ரிப்போர்ட்டின் படி டெல்லி தலைமை நடவடிக்கை எடுத்தால் மாநில நிர்வாகிகள் பலருக்கும் சிக்கல்தான் என்கிறது கமலாலய வட்டாரம்.
இது ஒரு பக்கம் இருக்க, இதே தேர்தல் செலவின விவகாரத்தில் வேலூரில் எச்.ராஜா முன்னிலையில் அடிதடி அரங்கேறியிருக்கிறது.
மக்களவை தேர்தலில் தமிழகம் , புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததால் அந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்டந்தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து அறிய, குழு ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் என்று சட்டசபை தொகுதி வாரியாக இந்த ஆய்வுக்கூட்டம் தனித்தனியாக நடந்தது.
இதில், கே.வி.குப்பம் தொகுதி ஆய்வுக்கூட்டத்தில்தான் ரகளை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் தோல்விக்கு காரணமே தலைமை கொடுத்த பணத்தை யாரும் தேர்தலில் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது கூட்டத்தில், யார் யார் எவ்வளவு சுருட்டுனாங்க? என்று நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
எச்.ராஜா முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் அடிதடியில் இறங்கியதால் அவர் உத்தரவிட்டதன் பேரில், பிற நிர்வாகிகள் சண்டை போட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.