’’கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதுல இறக்கி வச்சிருக்கேன்’’ என்று இயக்குநர் லிங்குசாமி சொன்னதற்கும், அஞ்சான் படத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாததால் அந்தப்படத்தினை சமூக வலைத்தளங்கில் கடுமையாக வறுத்தெடுத்தனர் ரசிகர்கள். அதே போன்று ‘’2 ஆயிரம் கோடி அடிக்கும் ‘’ என்று ஞானவேல் ராஜா சொன்னதற்கும் கங்குவா படத்திற்கும் சம்பந்தம் இல்லாததால் அப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
படம் ரிலீசில் இருந்து கங்குவா படத்தை ’கக்குவா’ என்று ரசிகர்கள் மரண அடி அடித்து வந்த நிலையில், தனுஷ் – நயன்தாரா பிரச்சனையில் கங்குவாவை மறந்திருந்தார்கள். மீண்டும் ஜோதிகா அந்த பிரச்சனையை எழுப்பி விட்டுவிட்டார். ‘’யாரோ ஒரு கூட்டம் சதி செய்கிறது” என்று விமர்சிப்போரை குறைசொல்ல, மீண்டும் கங்குவாவை வச்சி செய்கிறார்கள் ரசிகர்கள்.
படத்தின் முதல் 30 நிமிடங்கள் கத்தோ கத்து என்று கத்துகிறார்கள்; சகிக்கலை என்று ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், ஜோதிகாவும் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார். அதனால், 3 மணி நேர படத்தில் 30 நிமிடங்கள் மட்டும் சரியாக இல்லை என்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு உள்ளே போங்க என்று ஜோதிகாவே சொல்கிறாரா? என்று ரசிகர்கள் முன்னைவிட அதிகமாக வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜோதிகாவை வைத்து ’உடன்பிறப்பே’ படம் எடுத்த இரா.சரவணன், ‘’ சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை’’ என்றுரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘’சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?’’ என்று கேட்கும் சரவணன், ’’3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
கங்குவா படத்தை விமர்சனம் செய்யும்போது சூர்யாவை தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் விமர்சனம் செய்வதால், அந்த அறிக்கையின் இறுதியில், ‘’ பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…’’ என்கிறார் சரவணன்.