கர்நாடக மாநில அரசின் படத்திட்டத்தில் இருந்து கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் தந்தை பெரியார் குறித்த பாடம் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ரோஹித் சக்ரதீர்த்த குழு, முற்போக்கான, சீர்திருத்த எழுத்தாளர்களின் படைப்புகளை நீக்க கர்நாடக கல்வித் துறைக்குப் பரிந்துரைத்தது.
அதன்படி தந்தை பெரியார், கிரிஷ் கர்னார்டு, தேவிதாசர அனந்தமூர்த்தி ராவ் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த எழுத்தாளர்களின் பாடங்களை கடுமையான எதிர்ப்பையும் மீறி நீக்கி, புதிய புத்தகங்களை அப்போதைய பாஜக மாநில அரசு அறிமுகம் செய்தது.
இந்த சூழலில், தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் 10-ம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறை மீண்டும் சேர்த்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையில் ஆய்வுக் குழுவை அமைத்திருந்த நிலையில், குழுவின் பரிந்துரைப்படி தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு உட்பட சந்திரசேகர கம்பாரா, கிரிஷ் கர்னார்டு, தேவிதாசர அனந்தமூர்த்தி ராவ் படைப்புகளும் மாநில அரசின் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் படைப்புகளும் வரலாற்று பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பு, அடிப்படை கடமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
சமணம் மற்றும் பௌத்த மதங்களை சேர்ந்த புதிய பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்து “தர்மா” என்கிற சொல்லை “மதம்” எனவும் மாற்றி கர்நாடக மாநில அரசு பல சொற்களை திருத்தி உள்ளது.