நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்காததால் 100 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் என்று தகவல் பரவுகிறது.
கரூர் அடுத்த வாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பினாமி என்று சொல்லப்படுகிறது. ஆனால், தன்னை அடித்து உதைத்து, தன் மனைவி , மகளை மிரட்டி, தன் மகள் பெயரில் உள்ள 100 கோடி ரூபாய் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் தன் ஆட்கள் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார் விஜயபாஸ்கர் என்று கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விஜயபாஸ்கருக்கு எதிரான திரும்பினார் பிரகாஷ்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த போலீசார் சென்றபோது, இதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் விஜயபாஸ்கர். இதன் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணைக்கு பயந்து விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் கரூரை விட்டே ஓடிவிட்டார்கள் என்று தகவல் பரவுகிறது.
விஜயபாஸ்கர் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்த விசாரணையை இதுவரைக்கும் தொடங்கவில்லை என்றும் சொல்லும் சிபிசிஐடி, தன் மீது வழக்கு தொடருவதற்கு முன்பாகவே விஜயபாஸ்கர் ஏன் முன் ஜாமீன்கேட்டு நீதிமன்றத்தை நாடினார்? பிரகாஷுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வாங்குவதற்கு வசதி இருந்ததா விஜயபாஸ்கர் பணத்தில்தான் பிரகாஷ் சொத்து வாங்கினாரா? என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறது.
அதிமுக சீனியர் தம்பிதுரை, வெளிமாநிலத்தில் உள்ள தன் கல்வி நிறுவனத்தில் தற்போது விஜயபாஸ்கரை தங்க வைத்திருப்பதாகவும், போலீஸ் அந்த இடத்தை கண்டறிந்து வந்துவிட்டால், அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லவும் திட்டமிட்டுள்ளார் விஜயபாஸ்கர் என்கிறது கரூர் வட்டாரம்.