இந்தியாவின் சியாச்சின் பனிப்பாறையின் வடக்கே உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக சீனா கான்கிரீட் சாலைகளை அமைத்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த புதிய சாலையை சீனா அமைத்து வருகிறது. இப்பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963-ம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைத்தது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் G219 நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திலிருந்து தொடங்கி, இந்த சாலை இந்தியாவின் (சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே) ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் வந்து முடிகிறது (ஒருங்கிணைப்பு: 36.114783°, 76.670).
முன்னதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மார்ச் மாதம் இரண்டு முறை இந்த இடத்தை நேரில் பார்வையிட்டிருந்தார்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் India Today செய்தி நிறுவனத்தின் ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழு மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த சாலையின் அடிப்படை பாதை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்படும் இந்த புதிய சீன சாலை ‘அகில் கணவாய்’ வழியாக அமைக்கப்படுகிறது. கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் முன் திபெத் – இந்தியாவின் எல்லையாக இப்பகுதி இருந்தது.
இந்த சாலை டிரான்ஸ்-காரகோரம் பாதையில் உள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் ‘டிரான்ஸ்-காரகோரம் பாதை’ பகுதி வரலாற்று ரீதியாக காஷ்மீரின் ஒரு பகுதியாகும்.
சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இப்பகுதி, 1947 போரில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு, 1963-ல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-சீன எல்லையை ஒட்டி பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து ஏற்படுத்தி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல்களை விடுப்பதாக கருதப்படுகிறது.