தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மணி நேரம் அந்த அறையில் இருந்த கஸ்தூரி, தனிமையில் இருப்பது ரொம்பவே மன அழுத்தத்தை தருகிறது. பேச்சு துணை இருப்பது மாதிரியான அறைக்கு மாற்றுங்கள் என்று வார்டனிடம் கேட்டுக்கொண்டதால், மூன்று பெண்கள் தங்கி இருக்கும் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறையில் அவருக்கு தலையணை, போர்வை வழங்கப்பட்ட நிலையில் தலையணையை மட்டும் வாங்கிக்கொண்டு போர்வையை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். தான் எடுத்துச் சென்ற போர்வையை கொடுக்கச்சொல்லி வாங்கிக்கொண்டிருக்கிறார்.
சிறையில் நேற்று காலையில் பிரிஞ்சி சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மதியம் சாம்பார் சாதமும் பொறியலும் வழங்கியிருக்கிறார்கள். இரவு சப்பாத்தி கொடுத்திருக்கிறார்கள். சக கைதிகள் அதை சாப்பிட்டபோதிலும் கஸ்தூரியால் சாப்பிட பிடிக்காமல் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசியிருக்கிறார்.
குடிப்பதற்கு மெட்ரோ வாட்டர் கொடுத்திருக்கிறார்கள். அதை தன்னால் குடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, வார்டனிடம் பிஸ்லரி வாட்டர் கேட்டிருக்கிறார். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கைதிகள் வெளிபொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று வார்டன் கறாராகச் சொல்லி இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி சக கைதிகல் குடித்த மெட்ரோ வாட்டரையே குடித்திருக்கிறார்.
சிறையில் மின் விசிறி இருந்தாலும் கொசுக்கடி அதிகம் இருந்ததால், தூங்க முடியாமல் தவித்தபோது, இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே என்று சக கைதிகளிடம் புலம்பி இருக்கிறார்.
இதற்கிடையில் கஸ்தூரி மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை கைது செய்துள்ளனர். அதனால் அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று அல்லது நாளை விசாரணை நடைபெற இருக்கிறது.
கஸ்தூரி கைதாகி சிறையில் இருந்த நேரத்தில் அவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளதால், இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் முயற்சியில் கஸ்தூரியை சிலர் இயக்குவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கஸ்தூரியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக கஸ்தூரியை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கோயம்பேடு, மதுரை, கும்பகோணம், மதுரை என்று 6 இடங்களில் கஸ்தூரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போதையை கைது வழக்கில் ஜாமீன் பெற்றாலும் கூட, அடுத்தடுத்து 6 வழக்குகளில் கஸ்தூரி கைதாகலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.