மண்டைவீங்கி திரைத்துறையினரின் அடாவடியைக் கண்டித்து திரைத்துறையில் இருந்து வந்திருக்கிறது முதல் எதிர்க்குரல். அது கவிஞர் தாமரையின் எதிர்க்குரல்.
குடிகாரர்களைப் பற்றின படமாக வருகிறது ’பாட்டில் ராதா’. இப்படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் மிஸ்கின் பேசிய பேச்சுதான் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒரு பெண். அந்த மேடையில் நடிகை இருந்தார். மேடைக்கு முன்னே பத்திரிகையாளர்களில் பெண்கள் இருந்தனர். இத்தனை பெண்களையும் வைத்துக்கொண்டு, அந்தரங்க உறுப்புகளைச் சொல்லி மிஸ்கின் பேசினார்.
அவர் 40 நிமிடங்கள் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்காமல், மேடையில் அமர்ந்திருந்த இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர் உள்ளிட்டோர் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதிலும் பா.ரஞ்சித் கைதட்டி, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்.
திரையில் மட்டும் சமூக பொறுப்புணர்வைக்காட்டும் வெற்றிமாறனும், பா.ரஞ்சித்தும் பொதுமேடையில் அந்த சமூக பொறுப்புணர்வை எல்லாம் ஏன் காற்றில் பறக்க விடுகிறார்கள்? என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பொதுமேடையில் இப்படி ஆபாசமாக பேசும் மிஸ்கினை செருப்பால் அடித்தால் என்ன? என்று பத்திரிகையாளர்கள் பிஸ்மி உள்ளிட்ட பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்லூரிக் காலங்களில் தொடர்ந்து மூன்று வருட ஆண்டு விழாவிலும் முழுபோதையில் தான் பாடி முதல் பரிசை வென்றதாக மிஸ்கின் சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முழு போதையில் கல்லூரிக்குள் அனுமதியா? அது எந்த கல்லூரி? என்று ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மிஸ்கின் பேச்சுக்கு முதன் முறையாக திரைத்துறையில் இருந்து எதிர்க்குரல் வந்துள்ளது. திரைப்பட பாடலாசிரியர் தாமரை அந்த எதிர்க்குரலை எழுப்பி இருக்கிறார்.
’’பொதுவெளி நாகரிகம்’’ என்ற தலைப்பில் முகநூலில் தாமரை பதிவிட்டிருக்கும் அந்த கண்டனத்தில், ‘’பொதுவெளிகளில் காதுகூசும்படிப் பேசித்தான் கவனத்தைக் கவர வேண்டுமா ? அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு, நாம் இப்படியான அநாகரிகப் பண்பாட்டைத்தான் ‘இயல்பு’ எனப்பெயரிட்டு விட்டுச் செல்லப் போகிறோமா ? யார் இதை நிறுத்துவது ? எங்கே தொடங்குவது ??’’ என்று கேட்கிறார்.
’’பொதுமக்கள் காறித்துப்பினாலாவது புத்தி வருமா என்று பார்க்கலாம். ஒரு பொதுமேடையில் இவ்வாறு இழிமொழியில் பேசும் அதிகாரத்தை இயக்குநர்களுக்கு யார் தந்தது ? வெற்றி பெற்றவர்களென்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ??
அதை இரசித்துக் கைத்தட்டிச் சிரிக்கிற, மேடையிலுள்ள மற்றவர்களும் பார்வையாளர்களும் இதற்கு உடந்தைதான் ! இப்படிதான் சமூகச்சீரழிவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறார்கள்.
இதுபோன்ற அநாகரிகங்களைப் பலத்தகுரலில் பொதுமக்கள் கண்டனம் செய்யவில்லையெனில், நம் அடுத்த தலைமுறையை ஒரு கேவலமான சமுதாயத்தில் விட்டுச்செல்கிறோம் என்று பொருள்’’ என்று ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார்.
சினிமா மேடையில்தான் மிஸ்கின் இப்படிப் பேசி வருகிறார் என்றால், மாணவர்களிடையேயும் இப்படித்தான் ஏடாகூடமாக பேசிவருகிறார் என்று சொல்லி அதிரவைக்கிறார் தாமரை.
’’சில ஆண்டுகளுக்கு முன், இந்த மிஷ்கின், எம் ஐ டி எனும் அண்ணாப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவர்களிடையே இதேபோல் மிகக்கொச்சையான ஓர் உரையை நிகழ்த்தியிருக்கிறார்.
பேராசிரியர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். என் மகன் உட்பட சில மாணவர்கள் என்னிடம் புகாருரைத்தார்கள். ‘படிக்காதீர்கள், படிப்பதெல்லாம் வீண், பெற்றோரை எதிர்த்துப் புரட்சி செய்யுங்கள்’ என்கிற ரீதியில் போயிருக்கிறது பேச்சு. ஏற்கனவே பேயாட்டம் போடுகிற ஈர்க்கிகளுக்குக் (2கே குழந்தைகள்) காலில் சலங்கையையும் கட்டிவிட்டது போலாகாதா ?
மாணவர்களுக்கு அறிவுரை/அறவுரை சொல்லாவிட்டாலும் சரி ஆனால் தவறான வழிகாட்டல்தர இவர் போன்றவர்களுக்கு எது துணிவைத்தந்தது ? ‘புகழ்பெற்ற’ இயக்குநர் என்பதுதானே ?? தவறுசெய்கிறவர்கள் யாராக இருந்தாலும் – குறிப்பாகத் திரைத்துறையைச் சார்ந்தவர் என்றால் , கண்டிப்பாகத் தட்டிக்கேட்க வேண்டும். அவர்கள், தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்திருக்கிறோம் என்கிற மிதப்பில் இருக்கிறார்கள். கொஞ்சம் இந்தப்பூமியில் வாழ்வது என்றால் என்ன என்று காட்டிக் கொடுங்கள்’’ என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கும் தாமரை,
இந்தக் கண்டனம் சரி என்று கருதுகிறவர்கள் உரக்கக் குரல் எழுப்புங்கள். மண்டைவீங்கிகளின் காதில் போய் விழுகட்டும் என்கிறார்.